மகாராஷ்டிராவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பாஜக எதை
வேண்டுமானாலும் செய்கிறது என்று இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன.
மகாராஷ்டிராவில்
தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப்
பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக்
கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி
அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி
அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கியது.
3
கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த
சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார்
துணை முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் பதவியேற்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
விடுத்த அறிக்கையில், " மகாராஷ்டிராவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக
மோசமான வழிகளை தனக்குச் சாதகமாகக் கையாண்டுள்ளது. பாஜகவின் அரசியல்
ஒழுக்கக் கேடு மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. மிகவும் ரகசியமான முறையில்
முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி
ஏற்றதில் இருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக எந்த அளவுக்கு வளைந்து
செல்லும் என்பதைக் காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளது.
இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வெளியிட்ட அறிக்கையில், "
மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் ஜனநாயகத்தைக்
கேலிக்கூத்தாக்குகிறது. மாநிலத்தில் நடக்கும் சூழலை தனக்குச் சாதகமாக பாஜக
பயன்படுத்தி, தனது அதிகாரத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது
மகாராஷ்டிர
மக்கள்கூட காலையில் தாங்கள் தூக்கத்தில் விழிக்கும் முன்பே குடியரசுத்
தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு, முதல்வரும், துணை முதல்வரும் பதவி
ஏற்றுள்ளனர்.
மகாராஷ்டிராவில் நடந்துள்ள அரசியல் நிகழ்வுகள்,
ஆளுநரின் ஆட்சி குறித்து பல்வேறு சிக்கலான கேள்விகளை எழுப்புகிறது. ஆளுநர்
அலுவலகத்தையும், குடியரசுத் தலைவர் அலுவலகத்தையும் பாஜக தவறாகப்
பயன்படுத்தியுள்ளது என்று குற்றம் சாட்டுகிறோம். இந்த விஷயத்தில்
குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் பங்கும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.
அரசியலமைப்புச்
சட்டத்துக்குள் வரும் ஆளுநர் அலுவலகமும், குடியரசுத் தலைவர் அலுவலகமும்,
அரசியல் இலக்கை அடையப் பயன்படுத்தப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டம்" எனத்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment