Latest News

அரசு வக்கீல் என பொய் சொல்லி தகராறு செய்தவரைத் தாக்கிய போலீஸுக்கு நீதிமன்றம் கொடுத்த விநோத 'தண்டனை'!

ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞரை தாக்கிய போலீசார் மன்னிப்புக் கடிதம் அளிக்க வேண்டும் எனவும், தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ. 1,001 டிமாண்ட் டிராப் முறையில் அளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், போலீசாரும் வழக்கறிஞர்களும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது!
ஹெல்மெட் போடாமல் செல்வது குறித்து உயர் நீதிமன்றம்தான் முதல் முதலில் பெரும் புயலைக் கிளப்பியது. ஹெல்மெட் போடாமல் சென்று விபத்தில் சிக்குபவர்களுக்கு இழப்பீடு கொடுப்பது குறித்து காப்பீட்டு நிறுவனங்களின் முறையீடுகள் பெரும் தலைவலியாக உருவெடுத்தன. அதே நேரம், தமிழக அரசும் நீதிமன்றத்தின் உத்தரவினாலேயே ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில், ஹெல்மெட் குறித்த கெடுபிடிகள், எதிர்க்கட்சிகளின் ஊடக பிரசாரங்களால், அரசுக்கு மக்களிடம் செல்வாக்கை இழக்கச் செய்வதாக, இருந்தது. இதனால் ஹெல்மெட் குறித்து கெடுபிடி காட்ட வேண்டாம் என வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டதாகவும் செய்திகள் பரவின.
ஆயினும், அவ்வப்போது போலீஸார் ஹெல்மெட் இல்லாமல் செல்பவர்களைப் பிடித்து அபராதம் வசூலிப்பது, சில இடங்களில் முறைகேடாக பணம் வசூல் செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மதுரையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்று வழக்கறிஞர்கள், தாங்கள் சட்டத்துக்குக் கட்டுப்படாதவர்கள், அரசு விதிக்கும் சட்டங்கள் தங்களுக்கு செல்லாதவையே என்று காட்டினார்கள். தொடர்ந்து, இது தொடர்பில் மதுரையில் உள்ள உயர் நீதிமன்ற கிளை நீதிபதிக்கும், வழக்கறிஞர்களுக்குமான தகராறும் அப்பட்டமாக வெளியில் தெரிந்தது. 

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த சாலைப் போகுவரத்து தொடர்பான திருத்தப்பட்ட சட்டத்தை மற்ற சில மாநிலங்கள் ஏற்றுக் கொண்டு பின்பற்றத் தொடங்கியும், தமிழக அரசு அதனை இன்னமும் ஏற்று நடைமுறைப் படுத்தவில்லை. பழைய மாநில சட்ட விதிமுறையே இன்னமும் தொடர்கிறது.
இதனிடையே, கடந்த வாரம், நெல்லை மாவட்டம் புளியங்குடியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஹெல்மெட் அணியாமல் வந்த நபரைப் பிடித்து வைத்தனர். அதற்கு அந்த நபர், தாம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்கறிஞர் என்று சொன்னதாகவும், தொடர்ந்து போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப் படுகிறது. அப்போது, இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டதாகவும், அந்த வழக்கறிஞர் குறித்து விசாரித்த போலீஸார், அவர் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞராகப் பணி செய்கிறார் என்றும், அரசு வழக்கறிஞர் இல்லை என்றும் தெரிய வந்ததாகவும், போலீசாரைத் தாக்கிய அவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப் பட்டதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞரை தாக்கிய காவலர்கள் மன்னிப்புக் கடிதம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று வழங்கிய உத்தரவும், வழக்கறிஞர்களும் காவர்களும் நண்பர்களாக இருங்கள் என்று கூறிய அறிவுரையும் போலீஸாரை மட்டுமல்ல, சமூக ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மேலும், ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரத்தில் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ.1,001 டிமாண்ட் டிராப்ட் எடுத்து வழங்க வேண்டும் என்றும், வழக்கறிஞரிடம் போலீஸார் மன்னிப்புக் கடிதம் அளிக்க வேண்டும் என்று தலைமை காவலர்கள் இருவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது போலீஸாரிடம் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது. 

அடியும் வாங்கி பணமும் கொடுத்து மன்னிப்புக் கடிதமும் கொடுக்க வேண்டுமா? என்று புலம்புகிறார்கள் போலீஸார். 

இதற்கு பேசாமல், வழக்கறிஞர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள், வழக்கறிஞர்களுக்கு ஹெல்மெட்டில் இருந்து விலக்கு, சட்டம் படித்த வழக்கறிஞர்களை சட்டத்தை நடைமுறைப் படுத்தும் போலீஸார் கேள்வி கேட்கவோ தவறு செய்தால் தடுத்து நிறுத்தவோ கூடாது என்று தீர்ப்பை நீதிமன்றமே கொடுத்துவிடலாம், அல்லது அரசே ஓர் உத்தரவை இவ்வாறு வெளியிட்டு விட்டால், போலீஸார் அதற்கு ஏற்ப தங்களது கடமையைச் செய்துவிட்டுப் போவார்கள் என்று புலம்புகின்றனர் சிலர்! 

இதனிடையே, ஒரு கடைநிலைக் காவலரின் பணிவான வேண்டுகோள் என்ற தலைப்பில், சம்மட்டி அடி கொடுப்பது போல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகத் தளங்களின் வழியே ஒரு கடிதமும் வைரலாகி வருகிறது.
அதில். 

பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய காவல்துறை உயரதிகாரிகள் அனைவருக்கும் கடைநிலை காவலர்கள் சார்பாக ஒரு பணிவான வேண்டுகோள்.

தயவுசெய்து நீதிமன்றங்களை திருப்திப் படுத்துவதற்காக காவலர்களை கசக்கி பிழியாதீர்கள் !

அரசியல்வாதிகளுக்காக தெருவில் நிறுத்தி அசிங்கப்படுத்தாதீர்கள்!
அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில்.!

காவல்துறையினரை சட்டம் என்ன செய்யச் சொல்கிறதோ அதாவது சட்ட புத்தகம் என்ன செய்யச் சொல்கிறதோ அதை மட்டும் செய்யச் சொன்னால் போதும்!

காவல்துறையினரும் அவர்களது குடும்பத்துடன் நிம்மதியாக இருப்பார்கள்! யார் தலைக்கவசம் அணிந்தால் என்ன? அணியாமல் போனால் என்ன? யார் குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் என்ன? குப்புற விழுந்து செத்தால் என்ன?
சட்டப்படி நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தால் மட்டும் போதும்; மற்ற அனைத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்! எந்த துறையினராவது ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தம்மை கஷ்டப்படுத்தி கொள்வார்களா? ஆனால் காவல்துறையினர் மட்டும் பல்வேறு வகையான தகவல்களின் பேரில் , அறிவுரைகளின் பேரில் நாம் உன்னதமாக நினைக்கும் நீதிமன்றங்களின் அறிவுறுத்தலின் பேரில். எத்தனையோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் காவல்துறையினருக்கு கிடைப்பதோ பொதுவெளியில் அவமானமும் , அசிங்கமும் தான்!

நாமும் கொஞ்ச நாளைக்கு புகார் கொடுத்தால் மட்டும் நடவடிக்கை எடுப்போம். அதீத நல்லெண்ணத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பேரில் தேவையில்லாமல் இரவு ரோந்து, வாகன தணிக்கை, சோதனைச் சாவடி அலுவல் இவற்றை தவிர்ப்போம்.

பிரபல ரவுடிகளையும், கொள்ளைக்காரர்களையும் கொலைகாரர்களையும் யாராவது புகார் கொடுத்தால் மட்டும் சட்டப்படி கைது செய்து.. சட்டம் நமக்கு அறிவுறுத்தியபடி. தேவைப்பட்டால் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைப்போம்!
அவ்வாறு யாரும் புகார் தர முன்வராத போது, சாட்சியமளிக்க முன்வராத போது காவல்துறைக்கு மட்டும் என்ன தேவை ? 

பொது மக்களை துன்புறுத்தும் ரவுடிகளையும் கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரர்களையும், கொலை செய்யும் போக்கிரிகளையும் பொய் வழக்குப் போட்டு அவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும்.. காவல் துறையினர்... சட்டப்படி மட்டும் கொஞ்ச காலத்திற்கு செயல்படுவோம்.. அதற்கு தாங்கள் தான் மனது வைத்து அனுமதிக்க வேண்டும்!

அப்போது பார்க்கலாம் மனித உரிமை பேசும் தெய்வங்களையும் நீதியை நிலைநாட்டும் நீதிமான்களையும் காவல்துறையை கேவலமாக பேசும் அரசியல்வாதிகளையும் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் ?

அது வரை கொஞ்சம் காவல்துறைக்கு ஓய்வு கொடுங்கள்; அவர்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட அனுமதியுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்! - இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.