காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கட்சி
சேர்ந்ததையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிவசேனா கட்சி
எம்.பி.க்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்
பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், ஆட்சி அதிகாரத்தை
சமபங்காகப் பிரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.
முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க பாஜக முன்வராததால், பாஜக தலைமையில் ஆட்சி
அமைக்க சிவசேனா ஆதரவு தரவில்லை.
இதையடுத்து,
சிவசேனாக் கட்சி ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் காங்கிரஸ், தேசியவாத
காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தி வருகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்இருந்த சிவசேனா வெளியேறியது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால்,
அந்த கட்சியின் சார்பில் மத்திய கனரகத் துறைஅமைச்சராக இருந்த அரவிந்த்
சாவந்த் ராஜினாமா செய்தார். இதனால் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையிலான
விரிசல் அதிகமானது.
இந்த சூழலில் நாடாளுமன்றகுளிர் காலக் கூட்டத்
தொடர் நாளை தொடங்க இருப்பதால் அதுகுறித்து விவாதிக்க இன்று டெல்லியில்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டு இருந்தது. இந்தக் கூட்டத்திலும் சிவசேனா சார்பில் எந்த
பிரதிநிதியும் பங்கேற்கவில்லை.
இதனால்
நாளை தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் சிவசேனா
என்ன நிலைப்பாட்டை எடுக்கும், எவ்வாறு மத்திய அரசை அணுகும், சிவசேனா
எம்.பி.க்கள் மத்திய அரசை விமர்சிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு இருந்து
வந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத சூழலில் நாடாளுமன்றத்தின் இரு
அவைகளிலும் சிவசேனாவுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை ஒதுக்கியுள்ளது
மத்திய அரசு.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்
பிரஹலாத் ஜோஷி நிருபர்களிடம் இன்று டெல்லியில் கூறுகையில், " என்டிஏ
கூட்டணியிலும் சிவசேனா இல்லை, மத்திய அமைச்சர் பதவியில் இருந்தும் அந்த
கட்சி எம்பி. ராஜினாமா செய்துவிட்டார். தற்போது காங்கிரஸ், என்சிபியுடன்
சேர்ந்து பணியாற்றி வருகிறது சிவசேனா. ஆதலால், என்டிஏ கூட்டணியில் இருந்து
விலகிய ஒரு கட்சிக்கு எவ்வாறு நாங்கள் இடம் அளிப்பது, ஆதலால், இரு
அவைகளிலும் சிவசேனா எம்.பி.க்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம்
ஒதுக்கியுள்ளோம் " எனத் தெரிவித்தார்
No comments:
Post a Comment