Latest News

"தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வை கோட்டாபய பெற்று தர வேண்டும்": சி.வி.விக்னேஸ்வரன் விருப்பம்

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்றை பெற்றுத்தருவார் என்று நம்புகிறேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்
மேலும், "நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே நேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன். 

நாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இந்நாட்டு மக்கள் இன ரீதியாக இரு துருவங்களாகப் பிரிந்திருப்பதை வெளிக் கொண்டு வந்துள்ளது. இந்நாட்டில் இனப் பிரச்சினை ஒன்றிருப்பதை தெளிவாக இது எடுத்துக் காட்டுகின்றது.

அத்துடன் தமிழ் மக்கள் 10 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அநீதிகளையும் இன்னமும் மறக்கவில்லை என்பதையும் அவர்கள் பாதுகாப்பான ஒரு ஜனநாயக சூழலை விரும்புகின்றார்கள் என்பதையும் வாக்களிப்புப் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

பெரும்பான்மையின மக்களின் வாக்குகளை மையமாக வைத்து ஜனாதிபதித் தேர்தலை வெல்ல முடியும் என்று எடுத்துக் காட்டியிருக்கும் இலங்கையின் 7வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ நந்தசேன கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் நாட்டில் உள்ள எல்லா இன மக்களினதும் அடையாளம், பாரம்பரியம், உரிமை மற்றும் சுதந்திரம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பையும் தாம் வெகுவாக தம்பால் ஈர்த்துள்ளார் என்பதை உணர வேண்டும்.

ஒரு தரப்பாரின் வாக்குகளால் பதவி கிடைத்தாலும் ஜனாதிபதிப் பதவிப் பொறுப்பு என்பது நாட்டின் சகல இன மக்களையும் அவர்களின் பிரச்சினைகள், பொறுப்புக்கள், நலன்களையும் தம்மால் கொண்டுள்ளது என்பதை நாம் மறத்தல் ஆகாது.

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந்நாட்டின் எல்லா மக்களுக்கும் வளமானதும் சுமூகமானதும் சுபீட்சமானதுமான எதிர் காலத்தை அவர் வெகு விரைவில் கட்டி எழுப்புவார் என்று எதிர்பார்க்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.

source: bbc.com/tamil

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.