Latest News

பஞ்சமி நிலம் குறித்து விசாரிக்க அதிகாரமில்லை!' - தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தி.மு.க வாதம்

தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. பஞ்சமி நிலத்தை அபகரித்து முரசொலி அலுவலகம் கட்டப்பட்டதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து தி.மு.க தரப்பு முரசொலி அலுவலகம் தொடர்பாகச் சில ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிட்டது. முரசொலி நிலம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஆர்.சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் தெரிவித்தார்.
முரசொலி அலுவலகம்
இதையடுத்து இந்தப் புகார் குறித்து விசாரித்து பதிலளிக்க தலைமைச் செயலருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. பஞ்சமி நிலம் தொடர்பான விசாரணையின்போது நேரில் ஆஜராகுமாறு முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின், பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஆர்.சீனிவாசன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலரும் தி.மு.க அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி எம்.பி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முன்பு ஆஜராகி சீனிவாசன் அளித்த புகார் குறித்து தனது ஆட்சேபணையைத் தெரிவித்தார்.


இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, ``தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் சார்பாக முரசொலி நிலம் சம்பந்தமாக சம்மன் அனுப்பப்பட்டு இன்று 19.11.2019 ஆஜராகும்படி சொல்லியிருந்தார்கள். அதை இன்முகத்துடன் ஏற்று தகுந்த ஆதாரங்களுடன் இன்றைக்கு ஆணையத்தின் முன்பு ஆஜரானோம். ஆனால், புகார் கொடுத்த டாக்டர் சீனிவாசன் என்பவர் எனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அடுத்து வந்த தலைமைச் செயலாளரும் எனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிக்கிறார். ஆக அவர்கள் வாய்தா வாங்குவது எதைக் காட்டுகிறது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
ஆர்.எஸ்.பாரதி
நாங்கள் எங்கள் மடியிலே கனம் இல்லை என்பதால், தகுந்த ஆதாரங்களுடன் அதை நிரூபிப்பதற்காக வந்தோம். ஆனால், எங்கள் மீது என்ன குற்றச்சாட்டு இருக்கிறது என்ற புகாரைக்கூட சீனிவாசனால் கொடுக்க முடியவில்லை. அவரால் இதுவரை தகுந்த ஆவணங்களைக் கொடுக்க முடியவில்லை. கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அடுத்து அரசின் சார்பிலும் அவகாசம் தேவை என்று கேட்டுவிட்டு சென்றதாக ஆணையர் தெரிவித்தார். 


`இதுகுறித்து விசாரிக்கிற அதிகாரமே உங்களுக்கு இல்லை. நாங்கள் எல்லாவிதமான ஆதாரங்களோடும் வந்திருக்கிறோம். எங்கள் மீது சீனிவாசன் புகார் சொன்னார். அவர் என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்?' என்று கேட்டால் பதில் இல்லை. அரசாங்கத்தைப் பற்றிக் கேட்டீர்கள். அரசாங்கமும் வாய்தா வாங்கியிருக்கிறது. பஞ்சமி நிலமா இல்லையா என்று தேடுவதற்கு அரசாங்கத்துக்கு ஒரே ஒரு மணி நேரம் போதும். ஆனால், நீங்கள் சம்மன் அனுப்பி எத்தனை நாள்கள் ஆகின்றன.
உச்ச நீதிமன்றம்
தேடுகிறார்கள் தேடுகிறார்கள் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னுமா கிடைக்கவில்லை. போகிற போக்கில் ரோட்டில் போகிறவர்கள் சொல்கிற குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியாது. ஆகவே, உங்களுக்கு இதை விசாரிக்கிற அதிகாரமே இல்லை. ஏனென்றால், சில விதிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்' என்று கூறி அதற்குரிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையெல்லாம் கொடுத்திருக்கிறோம்.

இன்றே இந்த வழக்கு முடிந்துவிட்டதாக நான் கருதுகிறேன். ஆணையருக்கு இதிலே தலையிடுகிற அதிகாரம் இல்லை என்றும் சொல்லிவிட்டோம். அவரும் கால அவகாசம் வாங்கிவிட்டார். அதேபோல குற்றம் சாட்டிய சீனிவாசனும் வாய்தா வாங்கிவிட்டார். எங்களிடம் உள்ள ஆவணங்களைத் தயார் நிலையில் கொண்டு வந்தோம். இதில், தி.மு.க-வுக்குத்தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. தி.மு.க மீது யார் பழி சுமத்தினாலும் அந்தப் பழியைப் போக்குவதற்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க சட்டத்துறை வலுவோடு இருக்கிறது.
ஸ்டாலின்
மு.க.ஸ்டாலினின் வளர்ச்சியைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாத சில அரசியல்வாதிகள், அவருடைய வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவர்கள், முரசொலி நிலத்தைப் பஞ்சமி நிலம் என்று இந்தக் குற்றச்சாட்டை சொன்னார்கள். நிரூபிப்பதற்கு ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறோம். இதுவரை அவர்கள் தரப்பில் ஆதாரங்களைக் கொடுக்கவில்லை.

எங்கள் மீதான குற்றச்சாட்டில் சீனிவாசன் மீது நாளைய தினம் அவதூறு வழக்கு போடப்போகிறோம். இந்த பிரச்னையை முதன்முதலாகக் கிளப்பிய டாக்டர் ராமதாஸ் மீதும் அவதூறு வழக்கு போட இருக்கிறோம். அவருடைய 1,000 ஏக்கர் நிலம் யார் யார் பெயரில் இருக்கிறது என்பது வழக்கு போடும்போது தெரியும். அவதூறு வழக்கு போடும்போது இவையெல்லாம் வெளிச்சத்துக்கு வரும். அவர்கள் ஆதாரம் கொடுத்தால் எந்த நேரத்திலும் வரத் தயராக இருக்கிறோம் என்று ஆணையரிடம் சொல்லிவிட்டு வந்தோம். எப்போதும் வரத் தயார் எந்த இடத்துக்கும் வரத் தயார். சென்னை அல்ல டெல்லிக்கு கூப்பிட்டாலும் வரத் தயார் எனக் கூறிவிட்டு வந்திருக்கிறோம்" எனக் கூறினார்.
சீனிவாசன்
இதுகுறித்து பேசிய பா.ஜ.கவைச் சேர்ந்த சீனிவாசன், ``முரசொலி நில விவகாரத்தில் ஆவணங்களைத் தர மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது. இடைக்கால அறிக்கை தர இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. எங்களிடம் உள்ள ஆதாரங்களை விசாரணை ஆணையத்திடம் அளித்துள்ளோம்; அரசிடம் இருக்கும் ஆவணங்கள் குறித்தும் கேட்டுள்ளோம்" என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.