Latest News

பாதுகாப்பு நலன் கருதி நடவடிக்கை: பார்வையாளர்களுக்கு புகைப்படம் எடுத்த பிறகே கோட்டையில் அனுமதி...ஆதார் அட்டையும் கட்டாயம்

சென்னை: ரிசர்வ் வங்கி, கமிஷனர் அலுவலகம் போன்று தலைமை செயலகம் வரும் பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்து, அதற்கான ரசீது வழங்கப்பட்ட பிறகே உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கிறார்கள். இந்த நடைமுறை நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு ஆதார் அட்டையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகளை சந்திக்க தினசரி 1000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள். இவர்களை, போலீசார் பிரதான நுழைவாயிலில் சோதனை செய்து, யாரை பார்க்க வேண்டும், வீட்டு முகவரி, செல்போன் நம்பர் உள்ளிட்டவைகளை வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல இதுவரை அனுமதி அளித்து வந்தனர்.

இந்த நடைமுறை நேற்று முதல் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, நுழைவாயிலில் உள்ள போலீசார் தலைமை செயலகம் செல்லும் பார்வையாளர்களை செல்போன் மூலம் படம் எடுக்கிறார்கள். பின்னர் அவர்களின் ஆதார் அட்டை, வீட்டு முகவரி, செல்போன் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து, துண்டு சீட்டு போன்ற ரசீது வழங்கப்படுகிறது. அந்த ரசீது வைத்திருந்தவர்கள் மட்டுமே தலைமை செயலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் தலைமை செயலகம் வருவதால், ஒவ்வொருவரையும் படம் எடுத்து உள்ளே அனுப்பி வைக்க காலதாமதம் ஆவதால், நீண்ட வரிசையில் காத்திருந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. போலீசாருக்கும் இது பெரிய தலைவலியாக உள்ளதாக கூறப்படுகிறது.

காரணம், தலைமை செயலகம் செல்ல பல வழிகள் உள்ளன. ஆனால் ஒரு இடத்தில் புகைப்படம் எடுத்தாலும், வேறு வழியாக சென்றுவிட முடியும். இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும், கூடுதல் காவலர்களை நியமித்து, உடனே புகைப்படம் எடுத்து உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். அதேபோன்று, தலைமை செயலகம் வரும் பார்வையாளர்கள் உள்ளே செல்வதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தலைமை செயலக பாதுகாப்பு பிரிவில் உள்ள போலீஸ் உயர் அதிகாரி கூறும்போது, 'தலைமை செயலகத்துக்கு அமைச்சர்கள், அதிகாரிகளை பார்வையிட தினசரி அதிகளவில் பார்வையாளர்கள் வருகிறார்கள். பாதுகாப்பு நலன் கருதி அவர்களின் படம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் பெயரில் நடைபெறும் முறைகேடுகளையும் இதன்மூலம் தடுக்க முடியும்' என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.