மேயர் உள்ளிட்ட பதவிகளை நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவதை
ரத்து செய்து மறைமுகத் தேர்வு முறையை அமல்படுத்தும் அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மேயர் உள்ளிட்ட தலைமைப் பொறுப்புக்கு
வருபவர்கள் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் தேர்வு
செய்யப்படுவர்.
1996-ம் ஆண்டு முதல்
மேயர் உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மக்களால் தேர்தல் மூலம்
நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அது மாற்றப்பட்டு மறைமுகமாகத்
தேர்வு செய்ய சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் 2011 ஆம் ஆண்டு அதிமுக
ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சி அமைப்புகளில் நேரடித் தேர்தல் முறை மீண்டும்
கொண்டு வரப்பட்டது.
2016-ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்,
நேரடித் தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டு மறைமுகத் தேர்தல் கொண்டு
வரப்பட்டது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த
நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 11 அன்று சட்டப் பேரவையில் உள்ளாட்சி
அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, நேரடித் தேர்தல்
முறை மீண்டும் கொண்டு வரப்பட்டது.
தற்போது மீண்டும் நேரடித் தேர்வு
முறை ரத்து செய்யப்பட்டு மறைமுகத் தேர்தல் முறை கொண்டுவரப்படுவதாக அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. இன்று வெளியான தமிழக அரசின் அரசாணையில், மக்களால்
தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் மேயர்களைத் தேர்வு செய்ய வகை
செய்யப்படும் உத்தரவு வெளியாகியுள்ளது.
அதன்படி உள்ளாட்சித்
தேர்தலின்போது மேயர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடத்தப்படும்.
நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் மறைமுகத் தேர்தல் நடைபெறும்.
நகர்மன்றத் தலைவர்களையும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள்
தேர்வு செய்வர். பேரூராட்சித் தலைவர்களையும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட
கவுன்சிலர்களே தேர்வு செய்வர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த
அறிவிப்பு புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. திமுக உள்ளிட்ட கூட்டணிக்
கட்சிகள் முக்கிய அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment