Latest News

இப்படியா பேசுவார் ரஜினி.. கடும் அதிருப்தியில் அதிமுக.. அமைச்சர்கள் அடுத்தடுத்து கடும் தாக்கு!

சென்னை : சந்திரமுகி படத்தில் "முழுசா சந்திரமுகியாக மாறிய உன் மனைவி கங்காவை பார்" என்று பிரபுவிடம் ரஜினி சொல்வார். அவர் சொன்ன விஷயம் இன்று அவருக்கே முழுசாக பொருந்தியுள்ளது. ஆம் ரஜினி முழுமையாக இப்போது அரசியல்வாதியாக மாறிவிட்டார்.

நடிகராக இருந்தாலும் சமூகம் சார்ந்த விஷயங்களில் ஆளும் கட்சிகளை விமர்சிப்பதில் கொஞ்சம் மென்மையான போக்கையே ரஜினி கடைபிடித்து வந்தார்.

ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில் அரசியலை பற்றி சுத்தமாக ரஜினி வாய் திறக்காமல் இருந்தார். ஆனால் அவர்கள் இறந்த உடன் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததுடன் அவர்கள் இடத்திற்கு மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதாக கருத்து தெரிவித்ததுடன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றார்.
ரஜினி கருத்து
இந்த கருத்தை ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இரண்டுமே ரசிக்கவில்லை. ஆனால் வெற்றிடம் கருத்தை ரஜினி ஒரு முறை அல்ல, மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார்.
முதல்வர் பதிலடி
இதற்கு பதிலடியாக முன்பெல்லாம் மென்மையாக பதில் அளித்து வந்த அதிமுக அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பதிலடிக்கு பிறகு தனது போக்கை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது
முதல்வர் விமர்சனம்
ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து அண்மையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முதல்வர் பழனிச்சாமி, இவர்களுக்கு அரசியலில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் நிலைமை தான் ஏற்படும் என்றும் காணாமல் போவார்கள் என்றும் கடுமையாக பேசினார்.
அதிசயங்கள் நடந்துள்ளது
இப்படி சொல்லி சில நாட்களிலேயே அதாவது நேற்று 'கமல் 60' விழாவில் பேசிய ரஜினி, "அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். முதல்வராக பதவி ஏற்பார் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காமல் அவர் முதல்வரானார். இது தான் வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் என்ன மாதிரியான அதிசயங்கள் வேண்டுமானாலும் நடக்கும்.
ஆட்சி நீடித்துள்ளது
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்று சொன்னார்கள். நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள்.ஆனால் அதிசயம் நடந்தது. ஆட்சி நீடித்தது. அது மாதிரியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும். தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்" என்று தெரிவித்தார்.
அரசியல்வாதியாக
ரஜினியின் இந்த கருத்தை கேட்டு அதிமுக கடும் கோபத்தில் உள்ளது. ரஜினியை இதுவரை பெரிய அளவில் அதிமுக சீண்டியது கிடையாது. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ரஜினி இப்படி விமர்சித்திருப்பதை அரசியல் கண்ணோட்டத்துடன் அதிமுக பார்க்கிறது. அதாவது இதுவரை ரஜினியை ஒரு நடிகராக பார்த்த அதிமுக, அவரை இப்போது அரசியல்வாதியாக பார்க்க தொடங்கியிருக்கிறது. ஏனெனில் இதுவரை விமர்சனம் செய்யாத அமைச்சர்கள் கூட ரஜினியை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
முதல்வராக மாட்டார்
அமைச்சர் கருப்பண்ணன் கூறுகையில் "ரஜினி, கமல், சீமான் ஆகியோருக்கு முதல்வராகும் யோகம் இல்லை. படம் வெளியாகும் நேரத்தில் அரசியலுக்கு வருவதாக கூறும் நடிகர்கள், படம் வந்தபிறகு காணாமல் போகிறார்கள்" என்று தெரிவித்தார்.
தொட முடியாது
"சிகரெட்டை தூக்கி போட்டு பிடித்தவர்களை மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது" என்று அமைச்சர் ஒஎஸ் மணியன் கூறியுள்ளார்.
ரஜினி மீது தாக்கு
"அரசியல் என்ற சமுத்திரத்தில் முதலில் ரஜினி குதிக்கட்டும்; மீண்டும் அதிமுக ஆட்சி வரும் என்பதே அந்த அதிசயம்; அதிமுகவுக்கு மட்டும்தான் அதிர்ஷ்டம் நடக்கும்; அதிமுகவை பற்றி மட்டுமே ரஜினி பேசுவது பழுத்த மரமே கல்லடிபடுவதை போன்றது" என அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.