Latest News

இடைத்தேர்தல் வராது... 5 ஆண்டுகள் ஆட்சி நடக்கும் - சரத் பவார்...

மஹாராஷ்டிராவில் 5 ஆண்டுகள் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறும் என சரத் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதனையடுத்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் அதற்குள் மஹாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தி, குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நாளை ஆளுநரை நேரில் சந்தித்து பேச உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார், "மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி விரைவில் அமையும். இந்தக் கூட்டணி ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். எங்களின் கூட்டணி அரசு, வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும்.

அதுமட்டுமல்லாமல் மாநிலத்தில் இடைத்தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது. எங்கள் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற நிலைக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம். அதே நேரம் நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்களும் அல்ல" என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.