தேசிய அரசியலில் மகாராஷ்ட்ரா விவகாரம்
பரபரப்பாகப் பேசப்படுகிறது. தேர்தலில் கூட்டணி அமைந்து களமிறங்கிய பா.ஜ.க -
சிவசேனா அணிக்கு மகாராஷ்ட்ரா மக்கள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை
வழங்கினர். பெரும்பான்மை இருந்தும் பா.ஜ.க ஆட்சியமைக்க முடியவில்லை.
இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியைக் கேட்டதே இதற்குக் காரணம். தேர்தல்
கூட்டணியின்போதே இது பேசப்பட்டது, அமித் ஷா ஒப்புக்கொண்டார் என்றது
சிவசேனா. பா.ஜ.க தரப்போ இதைத் திட்டவட்டமாக மறுத்தது. சிவசேனாவச் சேர்ந்த
ஒருவர் மகாராஷ்ட்ரா முதல்வராக வருவார் என என் தந்தைக்கு சத்தியம்
செய்துள்ளோம். இதற்கு அமித் ஷாவோ, பட்னாவிஸோ எனக்குத் தேவையில்லை எனக்
கொந்தளித்தார் உத்தவ் தாக்கரே.
உத்தவ் தாக்கரே
பெரும்பான்மையின்
அடிப்படையில் ஆட்சியமைக்க பா.ஜ.க-வுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
சிவசேனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணம் ஆட்சியமைக்க முடியாத சூழலுக்கு பா.ஜ.க
தள்ளப்பட்டது. ஆளுநரை சந்தித்த அம்மாநில பா.ஜ.க-வினர்
ஆட்சியமைக்கப்போவதில்லை எனத் தெரிவித்தனர். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்
கட்சியுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியது சிவசேனா. இதில் உடன்பாடு
எட்டப்படாத நிலையில் மகாராஷ்ட்ராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி
அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில்
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியிடையே பேச்சுவார்த்தை
நடந்தது. உத்தவ் தாக்கரே முதல்வராகக் கூட்டணி கட்சிகள் ஒப்புக்கொண்டதாகவும்
ஆட்சியமைக்க உரிமைகோரவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. நவம்பர் 23-ம்
தேதி சிவசேனா கூட்டணி கட்சிகளுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க
உரிமைகோரவுள்ளதாகக் கூறப்பட்டது. உத்தவ் தாக்கரேதான் முதல்வர் என்ற நிலை
இருந்தது. நள்ளிரவில் காட்சிகள் மாறியது. மறுநாள் காலையில் தேவேந்திர
பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். மகாராஷ்ட்ராவில் நடந்துவந்த
குடியரசுத் தலைவர் ஆட்சி திடீரென வாபஸ் பெறப்பட்டது. அவசர அவசரமாக இந்தப்
பதவியேற்பு நடந்தது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தேசிய வாத
காங்கிரஸைச் சேர்ந்த அஜித் பவார் ஆதரவுடன்தான் பா.ஜ.க ஆட்சியமைத்தது.
தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி பா.ஜ.க-வின்
பட்னாவிஸ் முதல்வரானார்.
பட்னாவிஸ்
தேசியவாத
காங்கிரஸ் கட்சியின் சரத்பவாரின் அண்ணன் மகன்தான் இந்த அஜித்பவார்.
மகாராஷ்ட்ராவில் பட்னாவிஸ் ஆட்சியமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா,
தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இறுதி
உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ்
- தேசியவாத காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அம்மாநில நீர்ப்பாசனத்துறை
அமைச்சராக அஜித் பவார் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் விவசாயத்தை
மேம்படுத்துவதற்காகச் சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்தத்
திட்டங்களை அமல்படுத்தியதில் 70,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக்
குற்றச்சாட்டு எழுந்தது. அடுத்து நடைபெற்ற பா.ஜ.க ஆட்சியின்போது,
நீர்ப்பாசனத்துறையில் பொறியாளராக இருந்த விஜய் என்பவர் இந்த முறைகேடுகள்
தொடர்பாக முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினார். இதையடுத்து இந்த விவகாரம்
வெளியே வந்தது. பா.ஜ.க ஆட்சியில்தான் வழக்குதொடரப்பட்டது. அஜித் பவார்
மீதான ஊழல் வழக்கை வைத்துதான் பா.ஜ.க அவரை வளைத்ததாகப் பேசப்பட்டு வந்தது.
அஜித் பவார்
இந்நிலையில்
அஜித் பவார் மீதான ஊழல் வழக்குகள் முடித்து வைப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை
தெரிவித்துள்ளது. பா.ஜ.க ஆட்சியில் அஜித் பவாருக்கு எதிராகத் தொடரப்பட்ட
நீர்ப்பாசன திட்ட ஊழல் வழக்கில் 9 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை ரத்து
செய்துள்ளது. மகாராஷ்ட்ரா முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்ற 48 மணி நேரத்தில்
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 24 முதல் தகவல் அறிக்கைகள் இந்த
வழக்கில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. `அஜித் பவாருக்கு இந்த
முறைகேடுகளில் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்தது. இதன்காரணமாக 9
வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன" என அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment