நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு
வடகிழக்கு பருவமழை காரணமாக நன்றாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி
மலைப் பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்குகிறது.இதனால்
அணைகள், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. 3 மாவட்டத்திலும் உள்ள 1500-க்கும்
மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. நேற்றிரவு பாபநாசம், சேர்வலாறு அணை
பகுதியில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக சேர்வலாறில் 24 மில்லி மீட்டர் மழை
பெய்துள்ளது.
இதுபோல் கடற்கரை
பகுதியான திருச்செந்தூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நேற்று முதல் இன்று காலை வரை அங்கு 37 மில்லி மீட்டர் மழை
பெய்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பாபநாசம்
மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதனால் அந்த இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலை
ஏற்பட்டது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம்
நேற்று 142.35 அடியாக இருந்தது.
தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக
இருந்ததால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்வதால் பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி
142.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1754 கன அடி தண்ணீர் வந்து
கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து வினாடிக்கு
3000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் காரணமாக அகஸ்தியர்
அருவியில் தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது. ஆகவே அங்கு சுற்றுலா பயணிகள்
செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாரும் செல்ல முடியாத வகையில்
வனத்துறையினர் சாலையில் தடுப்புகளை அமைத்து கண்காணித்து
வருகின்றனர்.பாபநாசம் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர்
திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் கரை புரண்டு
ஓடுகிறது. இதனால் ஆற்று பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றின் கரையோரம் மற்றும் படித்துறைகளில்
நின்று யாரும் குளிக்க வேண்டாம் என்றும், ஆற்றின் உட்பகுதிக்கு
செல்லக்கூடாது என்றும் அம்பை தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்று பாபநாசம் படித்துறை, அம்பை, கல்லிடைக்குறிச்சி,
சேரன்மகாதேவி மற்றும் நெல்லை பகுதிகளில் பெரும்பாலானவர்கள் ஆற்றுக்கு
குளிக்க செல்லவில்லை.நெல்லை தைப்பூச மண்டபம் அருகே தாமிரபரணி ஆற்று தண்ணீர்
வெள்ளமாக படிக்கட்டுகளை மூழ்கடித்து செல்கிறது. குறுக்குத்துறை முருகன்
கோவில் பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
மழை காரணமாக
தாமிரபரணி பாசன கால்வாய்களிலும் வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் திறந்து
விடப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாயில் வினாடிக்கு 1750 கனஅடி தண்ணீரும்,
கோடகன் கால்வாயில் 3444, பாளையங்கால்வாயில் 2900, நெல்லை கால்வாயில் 2600,
மருதூர் மேலக்காலில்1440, மருதூர் கீழக்காலில் 400 மற்றும் மருதூர் ஆற்றில்
851 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம் தெற்கு
பிரதான கால்வாயில் 1230 கன அடியும், ஸ்ரீவைகுண்டம் வடக்கு பிரதான
கால்வாயில் 303 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. ஸ்ரீவைகுண்டம்
தடுப்பணையை கடந்து நேற்று வினாடிக்கு 104 கன அடி தண்ணீர் கடலுக்கு சென்றது.
இன்று பாபநாசம் அணையில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கடலுக்கும்
அதிகளவில் தண்ணீர் செல்கிறது.
No comments:
Post a Comment