Latest News

16 நாடுகளுடனான பிராந்திய ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் (RCEP)இணையப் போவதில்லை: இந்தியா முடிவு

பாங்காக், பிடிஐ
16 நாடுகள் இணையும் பிராந்திய ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் (Regional Comprehensive Economic Partnership-RCEP) இந்தியா இணையப்போவதில்லை என்று இந்தியா முடிவெடுத்துள்ளது. 

பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் அக்கறைகள் குறித்து எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் இதில் இந்தியா இணையாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பிராந்திய ஒட்டுமொத்த பொருளாதாரக் கூட்டமைப்பில் இந்தியாவின் நிலைப்பாடு பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தலைமைத்துவம் மற்றும் உலகநாடுகளிடையே இந்தியாவின் வளர்ச்சி, மதிப்பு பற்றிய பிரதிபலிப்புமாகும். இந்நிலையில் இந்த கூட்டுறவில் இந்தியா இணையாதது இந்திய விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கூடங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று அரசு தரப்பினர் கூறுகின்றனர். 

இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு நடைமுறைச் சாதக பாதகங்கள் பற்றியதாகும், இதனால் ஏழைகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், இந்தியச் சேவைத் துறைக்கு சாதக பலன்களை அளிக்கும் முயற்சியுமாகும். 

பல துறைகளிலும் உலகச் சந்தைப் போட்டிகளை திறந்து விடுவதில் இந்தியா பின் வாங்கவில்லை என்றாலும் இதன் மூலம் அனைத்து நாடுகளும் அனைத்துத் துறைகளும் பயனடைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வலுவாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆர்.சி.இ.பி.யில் 10 ஆசியான் நாடுகளும் 6 சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நாடுகளுமான சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் அடங்கிய 16 நாடுகள் கொண்டதே இந்த ஆர்.சி.இ.பி. ஆகும். பிராந்திய ஒட்டுமொத்த பொருளாதாரக் கூட்டுறவு நாடுகள் உருவாக்கத்தின் பிரதான நோக்கம் என்னவெனில் இந்த 16 நாடுகளின் 3.6 பில்லியன் மக்கள் தொகை பயனடையும் விதமாக உலகின் மிகப்பெரிய சுதந்திர வாணிப மண்டலமாக இது மாற வேண்டும் என்பதே. 

இந்நிலையில் சனிக்கிழமையன்று 16 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தியா அடையாளப்படுத்திய நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை. 

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியச் சந்தையில் சீனாவின் வேளாண் மற்றும் தொழிற்துறை உற்பத்திப் பொருட்கள் கொண்டு குவிக்கப்படும் என்று கவலை தெரிவித்த இந்தியா சந்தை அணுக்கம் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய உற்பத்திப் பொருட்கள் பற்றிய பிரச்சினைகளை கூட்டத்தில் எழுப்பியது. ஆனால் இதில் தீர்வு எட்டப்படவில்லை என்று தெரிகிறது. 

இது தொடர்பாக, ஆர்.சி.இ.பி. உச்சி மாநாடு தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக (கிழக்கு) செயலர் விஜய் தாக்கூர் சிங் பாங்காக்கில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, 'ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தில் இந்தியா இணையப்போவதில்லை என்பதை தெரிவித்து விட்டது. நன்னம்பிக்கையுடன் விவாதத்தில் ஈடுபட்ட இந்தியா, நம் நாட்டு நலன்களுக்காகக் கடினமாக வாதாடியது. இந்தச் சூழ்நிலையில் ஒப்பந்தத்தில் இணையாமல் இருப்பதே சரியான முடிவு என்று கருதுகிறோம்' என்று கூறினார். 

இந்நிலையில் இந்தியா இல்லாது 15 நாடுகளுடனான ஒப்பந்தம் அடுத்த ஆண்டு கையெழுத்தாகும் என்று தெரிகிறது. இந்தியாவுக்கும் இணைய கால அவகாசம் உள்ளதாக ஆர்.சி.இ.பி நாடுகள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.