ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சன் மரணம் ஏற்படுத்திய ரணங்கள் மனதை உலுக்கவே செய்கின்றன.
கடந்த
25-ம் தேதி மாலை 5.30 மணியளவில், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த
குழந்தை சுஜித் வில்சன், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை
மீட்கப் பலரும் போராடினார்கள்.
எமனான காலதாமதம்

தகவலறிந்து
முதன்முதலில் வந்த தீயணைப்புப்படை வீரர்கள், 3 பொக்லைன் எந்திரங்கள்
மூலம், ஆழ்துளைக் கிணறு அருகே பெரிய பள்ளம் தோண்டினர்.
அதுதான் குழந்தையை மேலும் ஆழத்துக்குச் செல்ல வழிவகுத்தது என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு.
அடுத்து,
வருவாய்த் துறையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் மற்றும் தேசிய மீட்புப்
படையினர், என்.எல்.சி, ஓ.என்.ஜி.சி எனப் பல்வேறு துறை வல்லுநர்கள் 80 மணி
நேரம் போராடினர். ஆனால், மீட்புப் பணிகளில் முன்னேற்றம் இல்லை. குழந்தை
அடுத்தடுத்து ஆழத்தில் சென்றதால் மீட்புப்பணி தாமதம் ஆனது.
நான்கு
நாள்களாக, குழந்தை உயிரோடு வருவான் எனக் காத்திருந்த பலருக்கும் கடந்த
29-ம் தேதி அதிகாலை அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தை சுஜித் வில்சனை
உயிரோடு மீட்க முடியவில்லை என அரசு அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில்
குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட விவகாரமும், மீட்புப் பணியை முடக்கிய
விதமும் தற்போது சர்ச்சையாகி வருகிறது.
நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை!
இதுதொடர்பாக
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி
அப்துல் கலாமின் உதவியாளராக இருந்த பொன்ராஜ், "ஆழ்துளைக் கிணற்றில் ஒரு
குழந்தை சிக்கிக்கொண்டால், குழந்தையை மீட்பதற்காக உயர் நீதிமன்றம்
உத்தரவிட்ட 6 வழிமுறைகளில் எதையும் சுஜித் வில்சன் மீட்பு விவகாரங்களில்
மீட்புக்குழுவினர் செய்யவில்லை" எனக் குற்றம் சாட்டி உள்ளாராம்.
இதேபோல்,
குழந்தை சுஜித் வில்சன் மீட்கப்படும் வரை, அவனது வீட்டிலேயே தங்கியிருந்த
கரூர் எம்.பி ஜோதிமணி, "அமைச்சர்கள், அதிகாரிகள் இரவு பகலாக மீட்புப்
பணிகளைக் கவனிக்கிறார்கள். மறுப்பதற்கில்லை. ஆனால், பிளான் 'பி' இல்லை. ஒரு
ஐடியா தோல்வியடைந்தால், மாற்று ஐடியா இல்லை. தொடக்கத்திலிருந்து ஏற்பட்ட
தாமதங்கள்தான், குழந்தையின் உயிருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது" என
எச்சரித்துக்கொண்டே இருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்
மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் அவர் எடுத்து கூறியும் கேட்க
மறுப்பதாக குற்றம் சாட்டினார்.
மீட்புப் பணியில் ஆர்வம் காட்டியிருக்கலாம்
நேற்று
மதியம் நடுக்காட்டுப்பட்டிக்கு நேரில் வந்த திமு.க தலைவர் ஸ்டாலின்,
"மீட்புப் பணிக்கு உடனடியாக மத்திய பேரிடர் மீட்புக் குழுவை
அழைத்திருக்கலாம். ராணுவத்தை அழைக்காதது ஏன், சுஜித் வில்சனை 36 அடி
ஆழத்திலேயே மீட்டிருக்க வேண்டும். அமைச்சர்களும் அதிகாரிகளும் பேட்டி
அளிக்க காட்டிய ஆர்வத்தை, மீட்புப் பணியில் காட்டியிருக்கலாம்" என்றெல்லாம்
குற்றம் சாட்டி, "இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடரக்கூடாது" என்று பேட்டி
கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.
இப்படியிருக்க, சம்பவம் நடந்து 16 மணி
நேரம் கழித்தே தங்களுக்குத் தகவல் வந்ததாகவும், அதனாலேயே குழந்தையை மீட்க
முடியவில்லை எனவும் தேசிய பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள்
பேட்டிகொடுத்துள்ளனர். மேலும், அமைச்சர்கள் வழிநடத்தியதால் பலமணி நேரம்
மீட்புப் பணிகள் தாமதம் ஆனது என மீட்புப்பணிகளை முன்னெடுத்த அதிகாரிகள்
வெளிப்படையாகவே புலம்பிவருகிறார்கள்.
அமைச்சர் மீது எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
நேற்று
மாலை, நடுக்காட்டுப்பட்டிக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
பாதிக்கப்பட்ட சுஜித் வில்சனின் தாயிடம், "அனைத்து தொழில்நுட்பங்களையும்
பயன்படுத்திவிட்டோம். சுஜித் வில்சனை மீட்க முடியவில்லை" என ஆறுதல்
கூறினார்.
முதல்வர், துணைமுதல்வர் சகிதமாக சுஜித் வில்சனின்
உருவப்படத்துக்கு மாலை அணிவித்தபோதும், வீட்டுக்கு உள்ளே பெற்றோருக்கு
ஆறுதல் கூறியபோதும், இறுதியாக பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போதும்
லோக்கல் எம்.எல்.ஏ சந்திரசேகர், எம்.பி ரத்தினவேலு, லோக்கல் அமைச்சர்கள்
வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை
அருகில் இருந்தார்களே தவிர, அமைச்சர் விஜயபாஸ்கர் கொஞ்சம் தூரத்திலேயே
இருந்தார்.
குழந்தை
சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய நேரத்திலிருந்து
நடுக்காட்டுப்பட்டி கிராமத்திலேயே தங்கியிருந்து மீட்புப் பணியைக்
கவனித்துவந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர். தவிர, அங்குவந்த ம.தி.மு.க தலைவர்
வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், தி.மு.க முன்னாள் அமைச்சர்
கே.என்.நேரு ஆகியோருக்கு மீட்புப்பணிகள் குறித்து விளக்கிக் கூறினார்.
ஆனால், நடுக்காட்டுப்பட்டிக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, அரசு
மேற்கொண்ட மீட்புப்பணிகளை விளக்க வேண்டியவர் தூரத்தில் நின்றது ஏன்
என்பதுதான் விவாதமாகியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள்,
"சுஜித்
வில்சனை உயிரோடு மீட்டுவிடலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கடி
தலைமைக்குக் கூறிவந்தாராம். அவர் கூறியதை நம்பிய எடப்பாடி பழனிசாமி,
அனைத்து சுதந்திரமும் கொடுத்து மீட்புப் பணிகளை முடுக்கிட உத்தரவிட்டாராம்.
ஆனால், இவ்வளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் சுஜித் வில்சனை உயிரோடு
மீட்கவில்லையே என்கிற கோபமும், இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளை
முன்னிலைப்படுத்தாமல், தன்னை முன்னிலைப்படுத்தியதால் உண்டான கோபமும்
சேர்ந்துகொண்டதனால், மணப்பாறை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
விஜயபாஸ்கரிடம் சத்தம் போட்டாராம். அதனால்தான், அமைச்சர் விஜயபாஸ்கர்
அருகில் நிற்கவில்லை" என்றார்கள்.
எடப்பாடி பழனிசாமியுடன் விஜயபாஸ்கர்
இதுகுறித்து
விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களிடம் கேட்டோம், "குழந்தை சுஜித் வில்சனை உயிரோடு
மீட்பதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் பட்ட கஷ்டங்களை நாடே அறியும். குழந்தையை
உயிரோடு மீட்க முடியவில்லை என்கிற வருத்தம் எல்லோரையும் விட அமைச்சருக்கு
அதிகமாக உள்ளது. சுஜித் வில்சனை உயிரோடு மீட்கவில்லை என முதல்வர், அமைச்சர்
மீது கோபப்பட்டதாகக் கூறுவதில் உண்மையில்லை. அப்படி முதல்வர் கோபமாக
இருந்தால், இன்று பசும்பொன்னில் நடக்கும் முத்துராமலிங்கத் தேவரின் 112-வது
பிறந்தநாள் விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வருடன் கலந்துகொள்ள
முடியுமா?" என்றனர்.
No comments:
Post a Comment