
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர்
17-ல் ஓய்வு பெற உள்ளார். அதற்குள் அயோத்தி நில வழக்கு, சபரிமலைக்கு
பெண்கள் செல்ல அனுமதித்தது தொடர்பான வழக்கு உள்ளிட்டவைகளில் தீர்ப்புகளை
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய், கடந்த ஆண்டு
அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார். அஸ்ஸாம் முன்னாள் முதல்வரான கேசவ் சந்திர
கோகாயின் மகன் ரஞ்சன் கோகாய்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக 2010-ல்
நியமிக்கப்பட்டார். பின்னர் 2011-ல் அந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக
பதவி உயர்வு பெற்றார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவுக்கு எதிராக
போர்க்கொடி தூக்கியவர்களில் ரஞ்சன் கோகாயும் ஒருவர். இந்திய வரலாற்றில்
முதல் முறையாக தலைமை நீதிபதிக்கு எதிராக அவருக்கு அடுத்த நிலையில் இருந்த
மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தற்போது தலைமை நீதிபதி
ரஞ்சன் கோகாய் நவம்பர் 17-ந் தேதி ஓய்வு பெற இருக்கிறார். நாடே பெரும்
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சில முக்கிய வழக்குகளை விசாரித்து அதன்
தீர்ப்புகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச்
ஒத்திவைத்திருக்கிறது. அவர் ஓய்வுபெறுவதற்குள் இந்த வழக்குகளின்
தீர்ப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி வழக்கு
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சம்பந்தப்பட்ட தரப்புகளான
சன்னி வஃக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா அமைப்புகள் சரி சமமாக
பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள்
தாக்கல் செய்யப்பட்டன.


40 நாட்கள் தொடர் விசாரணை
இம்மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச்
தீர்ப்பை ஒத்திவைத்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் அக்டோபர்
16-ந் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் தொடர்ந்து இம்மேல்முறையீட்டு விசாரணை
நாள்தோறும் நடத்தியது உச்சநீதிமன்றம். இவ்வழக்கிலும் தாம் ஓய்வு பெறுவதற்கு
முன்னதாகவே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பளிக்கக் கூடும் என்கிற
பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா?
இத்தீர்ப்பை எதிர்த்து 40-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டன. இம்மனுக்களை தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்தது.
இவ்வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தலைமை
நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்ச் ஒத்திவைத்தது. இவ்வழக்கில் ஏற்கனவே
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்ச்
நிராகரிக்கலாம் அல்லது ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இந்த தீர்ப்பு
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


ரஃபேல் வழக்கில் சீராய்வு மனு
ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதை எதிர்த்து பொதுநலன் வழக்கு
தொடரப்பட்டது. இவ்வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசுக்கு ஆதரவாக
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக பாஜகவின் முன்னாள்
அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி உள்ளிட்டோர் மறுசீராய்வு
மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதன் மீதான விசாரணையும் முடிவடைந்து
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.


ராகுல் மீதான அவதூறு வழக்கு
ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை
உச்சநீதிமன்றம் திருடன் என கூறிவிட்டது என காங்கிரஸ் முன்னாள் தலைவர்
ராகுல் காந்தி கூறியிருந்தார். இதற்கு எதிராக பாஜக மீனாக்ஷி லெகி
உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் போது தாம்
சொன்னது தவறு என ராகுல் கூறினார். இந்த வழக்கையும் விசாரித்தது தலைமை
நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச். ஆகையால் இவ்வழக்கிலும் தீர்ப்பு
எதிர்பார்க்கப்படுகிறது


நிதி மசோதா- பண மசோதா
2017 நிதி மசோதாவானது, தீர்ப்பாயங்களின் உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும்
படிகளை வழங்குவதற்கானது. இம்மசோதாவை பண மசோதாவாக மத்திய அரசு லோக்சபாவில்
நிறைவேற்றியது. ஆனால் இது அரசியல் சாசனப்படி முறையானது அல்லது என வழக்குகள்
தொடரப்பட்டன.


லோக்சபா சபாநாயகருக்கு அதிகாரம்
மத்திய அரசோ, ஒரு மசோதாவை எந்த வடிவத்தில் நிறைவேற்றுவது என்பதி லோக்சபா
சபாநாயருக்கான அதிகாரம். ஆதார் சட்டத்தை கூட பணமசோதாவாக நிறைவேற்றினோம் என
மத்திய அரசு வாதிட்டது. இவ்வழக்கையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
தலைமையிலான பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருக்கிறது. இதனால் இனி
வரும் நாட்கள் உச்சநீதிமன்றத்தில் அடுத்தடுத்த தீர்ப்புகளால் பெரும்
விவாதங்களும் பரபரப்பும் காணப்படலாம்.
No comments:
Post a Comment