
உத்தரபிரதேசம்: கனமழையால் தத்தளிக்கும் வடமாநிலங்கள்... உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளுத்து வாங்கிய மழையால் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இரண்டே நாட்களில் 79 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. தொழில் நகரமான கோரக்பூரில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பிராக்யாராஜில் மழையால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
அம்மாநிலத்தில், மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 79 ஆக அதிகரித்துள்ளது. அயோத்தி, வாரணாசி, மிர்சாபூர், காசிப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் மழையால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.. இந்நிலையில் இன்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் பெய்து வரும் கனமழையால் சாலைகள், தெருக்கள், வீடுகள் மட்டுமின்றி மருத்துவமனைகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. சாலைகளில் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ள மழைநீரில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கி சென்றனர். வைஷாலி, நவாடா, சமஷ்டிபூர் உள்ளிட்ட பகுதிகளில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.
பாட்னா ரயில் நிலையத்திலும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ராணுவத்தினரும் மீட்புக்குழுவினரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர். சரக்கு லாரிகள் மூலமும் பேருந்துகள் மூலமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக பீகார் அரசு தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் மிககனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment