
சென்னை: தனியார் மருத்துவகல்லூரிகளுக்கு சம்மன்... நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த வழக்கில், மாணவர் உதித் சூர்யாவையும் அவரது தந்தை வெங்கடேசனையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமும், தரகர் ஜோசப் என்பவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய போது, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக நீட் தேர்வில் இன்னும் பல ஆள்மாறாட்டங்கள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
பாலாஜி, எஸ்.ஆர்.எம். மற்றும் சத்ய சாய் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் இரு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி ஆகியோர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாகப் புகார் எழுந்தது. அவர்களில், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படித்து வந்த பிரவீன் என்ற மாணவர், ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்படவே, அவரையும் அவரது தந்தை சரவணன் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
ராகுல் என்ற மாணவரிடம், அபிராமி என்ற மாணவியிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது பெற்றோர்களிடமும் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு அந்தந்த பயிற்சி மையத்தில் தேர்வு பெற்றவர்களின் விவரங்களை சிபிசிஐடி சேகரித்து வருகிறது. நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையிடமும் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாலாஜி, சத்ய சாய் மற்றும் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கின் விசாரணை பாதிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் தப்பித்து விடக் கூடாது என்பதற்காக சம்மன் அனுப்பப்பட்ட நபர்களின் விபரங்களை சிபிசிஐடி போலீசார் ரகசியமாக வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment