Latest News

மூன்றாகப் பிரிக்கப்பட இருக்கிறதா சென்னை... மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன?

சென்னைப் பெருநகரம், மூன்று மாநகராட்சிகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை அதிகரித்துவருவதால், அதை நடைமுறைப்படுத்தலாமா என அரசு பரிசீலனையில் இருக்கிறது. சென்னையை மூன்றாகப் பிரித்தால், அடிப்படையில் அது எத்தகைய மாற்றத்தை விளைவிக்கும் என்பது குறித்து முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம்.
Chief Secretariat
"இவ்வளவு பெரிய நகரத்தை நிர்வாக ரீதியாக அணுகுவதற்குச் சுலபமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில், பிரிக்க இருக்கிறார்கள் என எண்ணுகிறேன். ஆனால், சென்னையை மூன்று மாநகராட்சிகளாகப் பிரிக்கிறார்களா அல்லது மாவட்டம் வாரியாகப் பிரிக்கிறார்களா என்பது இன்னும் சரியாக விளங்கவில்லை. சென்னை 174 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு மாவட்டம்.
இந்தியாவிலுள்ள பெருமாநகராட்சிகளான டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு இவையெல்லாம் சென்னையைவிடப் பரப்பளவில் மிகப் பெரியவையாகும். சென்னை, மூன்றாகப் பிரிக்கப்படுமானால் மத்திய - மாநில அரசு அளிக்கும் நிதிப்பங்களிப்பு என வரும்போது இன்னும் குறைவாக வரும். தமிழகத்தில் மற்ற மாவட்டங்கள் இப்படிப் பிரிக்கப்படும்போது, ஏற்படும் இழப்பைவிடச் சென்னைப் பிரிக்கப்பட்டு நிதி குறைந்தால் அதற்கான நிர்வாகச் சிக்கல் அதிக சிரமங்களை ஏற்படுத்தும்.
Subramanian
மத்திய அரசால் அளிக்கப்படும் நிதி, ஒவ்வொரு மாவட்டத்தின் பரப்பளவு மற்றும் நகரின் தொழில்சார்ந்த முக்கியத்துவத்தைக் கணக்கில் வைத்துதான் கொடுக்கப்படுகிறது. சென்னை பிரிக்கப்படுமானால், மத்திய அரசு வழங்கும் நிதியின் ஒரு கணிசமான தொகையை, நாம் இழக்க நேரிடும்.
மூன்று மாநகராட்சிகளாக, சென்னையைப் பிரிப்பதைவிட ஆவடியைத் தலைமையாகக் கொண்டு மாநகராட்சியையும் தாம்பரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மாநகராட்சியையும் உருவாக்கலாம். மையப்பகுதியான பாரம்பர்யமிக்க ஒரு பெருநகராட்சியான சென்னையை அப்படியே விட்டுவிட வேண்டும். பெருமாநகராட்சியாக உருவாகியிருக்கும் இதைக் கூறுபோடாமல், சென்னையோடு ஒட்டியிருப்பவற்றைப் புதிய மாநகராட்சிகளாக உருவாக்கிக்கொள்ளலாம் என்பது என் எண்ணம்.
chennai
ஏற்கெனவே மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களின்கீழ்தான் சென்னை இயங்குகிறது. எனினும், அதை முறைப்படுத்த வேண்டும். இது தவிர, உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் நிர்வாகம் எப்படிச் செயலற்று இருக்கிறது என்பது ஊரறிந்த விஷயம். ஆக, இதுவும் ஒரு பெரிய குறையாக நீடிப்பது இப்பெருநகரத்துக்கான பின்னடைவு. சென்னையை மூன்றாகப் பிரிப்பதற்கு முன், அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.