
தமிழக முன்னாள் சபாநாயகரும் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பி.ஹெச்.பாண்டியன் (74) நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்தவர். சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியில் 50 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வழக்கு, கிரிமினல் வழக்கு என்று ஏராளமான வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அன்புக்கு பாத்திரப்பட்ட பி.ஹெச்.பாண்டியன் எம்.எல்.ஏ-வாகவும், 1985-ம் ஆண்டு சபாநாயகராகவும், 1999-ம் ஆண்டு எம்.பி-யாகவும் பதவி வகித்திருக்கிறார்.
தவிர, அ.தி.மு.க-வில் தலைமை நிலையச் செயலாளராகவும், சட்ட ஆலோசகராகவும், அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவராகவும் பொறுப்புகளை வகித்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஓ.பி.எஸ் நடத்திய தர்ம யுத்தத்துக்கு பி.ஹெச்.பாண்டியன் உறுதுணையாக இருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு 'திடுக்கிடும்' தகவல்களையும் பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்துவந்தார். அ.தி.மு.க மீண்டும் ஒருங்கிணைந்த பிறகு சட்ட ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார். கட்சிக்குள்ளும் அவரது தலையீடு பெரியதாகத் தென்படவில்லை.
இந்த நிலையில், பி.ஹெச்.பாண்டியனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 10-ம் தேதி வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிலிருந்து, மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சி.எம்.சி தனியார் மருத்துவமனை
இதுபற்றி சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினோம். ''பி.ஹெச்.பாண்டியனுக்கு இருதயத்தில் சிறிய பிரச்னைதான். நலமுடன் இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது'' என்றனர். பி.ஹெச்.பாண்டியனின் உடல்நலத்தை அறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வேலூருக்கு வந்தார். சி.எம்.சி-யில் மருத்துவர்களைச் சந்தித்து, பி.ஹெச்.பாண்டியனின் உடல்நலம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

No comments:
Post a Comment