
வாஷிங்டன்: ஈரான் நாட்டில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது தொடர்பான புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளமான டுவிட்டரில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவுக்கும் மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் இடையே அணு ஆயுதங்கள் தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து கருத்து மோதல் நிலவுகிறது. ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.இந்நிலையில் ஈரானின் வடக்கு பகுதியில் அந்த நாட்டின் சார்பாக ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை தோல்வியில் முடிவடைந்தது. இதற்கிடையே ஈரானில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்ட இடம் தொடர்பான புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் 'ஈரான் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததற்கும் அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த செயல் ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அமெரிக்காவிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.'இதற்கு முன் அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த உளவு தகவல்களை இப்படி பகிரங்கமாக வெளியிட்டது இல்லை. டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்க பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும்' என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். செயலர் நீக்கம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் செயலர் மேடலின் வெஸ்டர்ஹாட்டை அதிரடியாக பதவியிலிருந்து நீக்கியுள்ளார். மேடலின் சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில்'டிரம்ப் தன் மகள் டிபானியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒருபோதும் விரும்பியது இல்லை' என தெரிவித்திருந்தார்.இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து மேடலினை பதவி நீக்கம் செய்துள்ள டிரம்ப்''என் மகள் டிபானியை மிகவும் விரும்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment