அது ஓர் அரசு மருத்துவமனையின் முதியோர் நலப்பிரிவு. கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தின் ஓர் ஓரத்தில் இருவருக்கு நடுவில் அமர்ந்திருக்கிறார் அந்த முதியவர். வயது 75 இருக்கலாம். ஆனாலும் ராணுவ அதிகாரியைப் போன்று மிடுக்கான தோற்றத்தில் இருந்தார். அவரின் இருபுறமும் அமர்ந்திருந்தவர்கள் மனைவியும் மகனும். அந்த இருவரையுமே அவருக்குத் தெரியவில்லை. யாரோ மூன்றாம் நபரிடம் பேசிக்கொண்டிருப்பதுபோல சம்பந்தம் இல்லாமல் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

சோகம் ததும்பிய குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, "75 வயது ஆனாலும் ஆரோக்கியமாகவே இருக்கிறார். ஆனால், அண்மையில் நடந்த எதுவுமே அவருக்கு ஞாபகம் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரச்னை தீவிரமாகி குடும்பத்தினரைக் கூட அடையாளம் தெரியவில்லை" என்றனர்.
மறதி நோய் (அல்சைமர்) என்பது முதியவர்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்னை. இந்தியாவில் 40 லட்சம் பேர் அல்சைமர் உள்ளிட்ட ஞாபக மறதி நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அல்சைமர் நோய் தாக்கத்தில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 2030-ம் ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 70 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்த நோய்க்கான விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ம் தேதி சர்வதேச அல்சைமர் நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அல்சைமர் போன்ற மறதி நோய் பாதித்த தொடக்கத்திலேயே உணவுமுறை, வாழ்க்கை முறையை முறைப்படுத்தினால் நோய் தீவிரமாவதைத் தடுக்க முடியும் என்கிறார் நரம்பியல் மருத்துவர் என்.கார்த்திகேயன்.
"மூளையில் உள்ள திசுக்கள் அழிவதால் ஏற்படும் நரம்பு சார்ந்த பிரச்னையே மறதி நோய் என்ற அல்சைமர் ஆகும். இது அறிவாற்றல் குறைபாடாகவோ செயல்பாட்டுக் குறைபாடாகவோ இருக்கலாம். பொதுவாக முதியவர்களையே இது அதிகம் பாதிக்கும். தற்போது இளவயதினரையும் இந்த நோய் பாதிக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் இனிப்புள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதாலும் நல்ல கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்ப்பதாலும் அல்சைமர் பாதிக்க அதிகம் வாய்ப்புள்ளது" என்றார்.
அல்சைமர் அறிகுறிகள்!
வீட்டில் தனிமையில் அதிகம் இருக்காமல் குடும்பம், சமூக, இலக்கிய, ஆன்மிக விழாக்களில் பங்கெடுப்பது என ஏதாவது வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டே இருந்தால் அல்சைமர் நோயை அண்டவிடாமல் செய்ய முடியும்.
நரம்பியல் மருத்துவர் என்.கார்த்திகேயன்
- சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகளை மறந்து போதல்
- குடும்பத்தினரின் பெயர்களை மறத்தல்
- தூக்கமின்மை
- குளறிய பேச்சு
- சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுதல்
- பொருள்களை இடம் மாற்றி வைத்தல்
- பொருள்கள் வைத்த இடத்தை மறந்து போவது
- உணவு உட்கொள்வதில் சிரமம்
- பிறர் உதவியின்றி அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் போவது
"இந்நோயை முழுவதுமாக குணப்படுத்த எந்தவிதச் சிகிச்சை முறையும் இல்லை. ஆனால், நோய் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்த முடியும். அதனால் அல்சைமர் நோயை, டைப் 3 சர்க்கரை நோய் என்றுகூடச் சொல்லலாம். இந்நோயால் சர்க்கரை நோயாளிகள் பிறரைவிட அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வைட்டமின் பி2, பி6, பி9, பி12 ஆகிய சத்துகள் அடங்கிய உணவுகளைத் தவிர்ப்பதால், உடலில் ஹோமோசிஸ்டின் (Homocystiene) என்ற அமினோ ஆசிட் அதிகம் சுரக்கும். ஹோமோசிஸ்டின் அதிகம் சுரப்பதாலும் அல்சைமர் நோய் பாதிக்கலாம்" என்கிறார் மருத்துவர் என்.கார்த்திகேயன்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்
- பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்
- மைதா மாவில் செய்த உணவுகள்
- கார்போஹைட்ரேட் சத்து அதிகமுள்ள உணவுகள்
- சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரை
- மது வகைகள், கஃபைன் சேர்க்கப்பட்ட உணவுகள்
- சர்க்கரை சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவுகள்
அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

- மாவுச்சத்து குறைவாகவும் , நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
- வால்நட், பாதாம், முந்திரி போன்ற பருப்பு வகைகள்.
- இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கோழி முட்டை, இறைச்சி.
- ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய்.
- பால் பொருள்களைக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
- காய்கறிகள், முழு தானியங்கள்.
- நல்ல கொழுப்பு அடங்கிய அவகேடோ (வெண்ணெய் பழம்), டார்க் சாக்லேட், முட்டை, மீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள பழ வகைகள்.
பழக்கவழக்கங்கள் முக்கியம்!
"உணவுமுறையைப் போன்றே வாழ்க்கை முறையிலும் சில பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, உடல் பருமனைத் தவிர்க்கும் பிரத்யேக உடற்பயிற்சிகள் போன்றவை மூளையில் செயல்பட்டு நன்கு ஊக்கமளித்து, ஞாபக மறதியைக் கட்டுப்படுத்தும். மனதை அமைதிப்படுத்தும் தியானம், யோகா, மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். 8 மணிநேரம் நிம்மதியான தூக்கம் அவசியம். ஒமேகா-3, வைட்டமின் B6, B12, D3 மற்றும் ஃபோலேட் போன்ற சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

இயற்கை உணவுகளான புதினா, வல்லாரை, மஞ்சள், அஸ்வகந்தா, அமுக்கரா கிழங்கு போன்றவையும் நரம்புகளின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவும். அதேபோன்று மனனப் பயிற்சி செய்தல், வாசித்தல், இசைக் கருவிகளை இசைத்தல், பாடுதல், சுடோகு, கிராஸ்வேர்டு போன்றவற்றை விளையாடுவது, வீட்டில் தனிமையில் அதிகம் இருக்காமல் குடும்பம், சமூக, இலக்கிய, ஆன்மிக விழாக்களில் பங்கெடுப்பது என ஏதாவது வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டே இருந்தால் அல்சைமர் நோயை அண்டவிடாமல் செய்ய முடியும்" என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
"தீதும் நன்றும் பிறர்தர வாரா!" என்ற முதுமொழி நோய்களுக்கும் பொருந்தும். ஒருவரது உடல் ஆரோக்கியத்தின் முழுப் பொறுப்பு அவர் கைகளில்தான் இருக்கிறது.
நன்றி : விகடன்
No comments:
Post a Comment