
கடந்த 26-ம் தேதி இரவு, திருச்சி டாஸ்மாக் கடை ஒன்றில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த "காக்கா" கார்த்திக் உள்ளிட்ட நண்பர்கள், தலைக்கேறிய போதையில், `எனக்கே வெட்டத் தெரியலைன்னு சொன்னான். அதான் அவனைப் போட்டு, உடலை எரிச்சிட்டோம் எனச்சொல்ல அந்த மதுபானக் கடையில் இருந்த பலரும் அதிர்ந்து போனார்கள்.
திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகன் தமிழழகன். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். அவர் நடிக்கும் படங்களை தனது நண்பர்களுடன் சென்று பார்ப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 7ம் தேதி, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படத்தைப் பார்க்கச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றார்.
Tamizhalagan
அதன்பிறகு வீடு திரும்பவே இல்லை. ஆனால் சில நாள் கழித்து அவரது பைக்கை, காக்கா கார்த்தி என்பவரின் நண்பர் ஒருவர், வீட்டில் வந்து நிறுத்திவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழழகனைப் பல்வேறு இடங்களில் தேடி அலைந்த அவரது உறவினர்கள், கிடைக்காத நிலையில் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தமிழழகன் காணாமல்போன அன்று இரவு, பொன்மலைப் பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களுடன் இருந்தது தெரியவந்தது. ஆனால், அவரது நண்பர்கள் முன்னுக்குப்பின் முரணாகத் தகவல் தெரிவித்ததால், போலீஸார் அவர்களைக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில்தான், தமிழழகனின் நண்பர்களான காக்கா கார்த்திக், ஆட்டோ ஜெகன், மணிகண்டன் ஆகியோர் தமிழழகனைக் கொலை செய்தது குறித்து மது போதையில் உளறியது போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீஸார் காக்கா கார்த்திகைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
போலீஸாரிடம் காக்கா கார்த்திக், ``கடந்த 7தேதி, நானும் தமிழழகனும் நேர்கொண்டபார்வை படம் பார்க்கப் போனோம். அப்போது எங்களுக்கும் பொன்மலைப் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அந்தத் தகராறில் நாங்கள் பிரபாகரனைக் கத்தியால் வெட்டிவிட்டோம். அதில் பிரபாகரனுக்கு முதுகில் காயம். அதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டோம். இதுதொடர்பாக பொன்மலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்கள். போலீஸாருக்கு பயந்த நாங்கள், நண்பர்களான மணிகண்டன் மற்றும் ஆட்டோ ஜெகன் ஆகியோருடன் சேர்ந்து நாவல்பட்டு பகுதியில் மது அருந்தினோம். அப்போது போதையில் மணிகண்டன் தமிழழகனைப் பார்த்து, `கத்தியைப் பிடித்து வெட்டக்கூட தெரியாத பையனை எல்லாம் சண்டைக்கு அழைச்சிக்கிட்டு போனியா? அந்தப் பிரபாகரனை வெட்டாமல் முதுகில் கீறிட்டு வந்து இருக்கீங்க' எனக் கிண்டல் அடித்தான்.
காக்கா கார்த்திக்
கடுப்பான தமிழழகன் மணிகண்டனைக் கத்தியால் வெட்ட முயன்றார். அப்போது ஏற்பட்ட தகராறில், தமிழழகன் எங்களையும் வெட்ட வந்தான். அதனால் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து கட்டையால் அடித்தோம். அதில் படுகாயமடைந்த தமிழழகன் இறந்துட்டான். செய்வதறியாத நிலையில் ஆட்டோ ஜெகன் கொடுத்த யோசனைப்படி, தமிழழகன் உடலை அங்கிருந்து ஆட்டோவில் எடுத்துச் சென்று பொன்மலை கணேசபுரம் சுடுகாட்டில் எரித்து விட்டோம். அதன் பிறகு ஒன்றும் தெரியாதது போல் இருந்தோம். போதையில் உளறி மாட்டிக் கொண்டோம்" என்றாராம்.
இந்நிலையில் காக்கா கார்த்திக் கைது செய்யப்பட்டதாகவும், அவரது நண்பர்களான ஆட்டோ ஜெகன் மற்றும் மணிகண்டனை போலீஸார் தீவிரமாக தேடி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், மூவரும் கைது செய்யப்பட்டதாக அவர்களிடம் பொன்மலை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, கன்டோன்மென்ட் ஆய்வாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
போலீஸாரின் விசாரணையில் தமிழழகன், செங்குளம் காலனிக்கு வருவதற்கு முன்பாக பொன்மலைப் பகுதியில் குடியிருந்ததாகவும், அப்போது காக்கா கார்த்திக், மணிகண்டன், ஆட்டோ ஜெகன் ஆகியோர் நண்பர்கள் என்றும் தெரியவந்திருக்கிறது. அதேபோல், ஆட்டோ ஜெகன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி ஏற்பட்ட தகராறில் இருவரும் தலைமறைவாக இருந்து வந்திருக்கிறார்கள்.
இவ்வழக்கில் `காக்கா' கார்த்திக் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றதாகவும், பிறகு அவர் சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான், நண்பர்கள் மதுபோதையில் உளறி மாட்டிக் கொண்டனர்.
தொடர்ந்து விசாரணை செய்யும் போலீஸார், கொலை நடந்த இடம் நவல்பட்டு பகுதி என்பதால், தமிழழகன் காணாமல் போனது குறித்த புகாரை கன்டோன்மென்ட் காவல் நிலையத்திலிருந்து கொலை வழக்காக மாற்றி, திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீஸார், தமிழழகனின் உடலை எரித்த இடத்தில் விசாரணை செய்து வருகிறார்கள்.
கொல்லப்பட்ட தமிழழகன்
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சிப் பகுதியில் கனமழை பெய்தது. இதில், எரிக்கப்பட்ட தமிழழகனின் உடல் சாம்பல் அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதனால், எஞ்சிய தடயங்களை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
காக்கா கார்த்திக்கை நீதிபதியின் முன் நிறுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். நண்பனைக் கொலை செய்து எரித்த சம்பவம் 20 நாள்களுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ள சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
No comments:
Post a Comment