
நீலகிரி மாவட்டத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் கண்டிராத பெருமழை பெய்தது. இந்தப் பெருமழைக்கு 7 பேர் பலியாகினர். 5 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. மழை வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்ட குந்தா, அவலாஞ்சி, ஓவேலி, நடுவட்டம், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
kanneri Rescue Camp
தற்போது மழை குறைந்து இயல்புநிலை மெல்ல திரும்பிவருகிறது. பெரும்பாலான மக்கள், தங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். ஆனால், ஏழை தோட்டத் தொழிலாளர்கள் பலர் தங்களது மண் வீடுகளையும் இழந்து கடந்த 2௦ நாள்களாக முகாம்களில் உள்ளனர். மேலும், விளைநிலங்களை வெள்ள நீர் சூழ்ந்ததால் கூலி வேலையையும் இழந்து தவித்துவருகின்றனர்.
ஊட்டி கன்னேரிமந்தனைப் பகுதியில் உள்ள பள்ளியில் வீடுகளை இழந்த 80 பேர் அரசு மீட்பு முகாமில் தஞ்சமடைந்து உணவு, உடை போன்றவற்றுக்காக அரசையும் தன்னார்வலர்களையும் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் மைக்ரோ ஃபைனான்ஸ் எனப்படும் நுண்கடன் நிறுவனங்கள் மீட்பு முகாமுக்கே வந்து கடன் தொகையை வட்டியுடன் மிரட்டி வசூலித்துச் செல்வதாக பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
kanneri Rescue Camp
மண்சரிவில் வீட்டை இழந்து முகாமில் தங்கியுள்ள பெண் ஒருவர் கூறுகையில், ``பசங்க படிப்புக்கு, ஆஸ்பத்திரி செலவுக்குனு எங்க பகுதியில நிறைய பெண்கள் மைக்ரோ ஃபைனான்ஸில் கடன் வாங்கியுள்ளோம். கூலி வேலை செய்தாலும் ஒரு மாதம் கூட தேதி தவறாமல் வட்டியுடன் அசலையும் தவணையாகச் செலுத்தி விடுவோம். மழையால வீட்டை இழந்து குழந்தையும் குடும்பமுமா முகாம்ல இருக்கோம். நிலைமையை எடுத்துச் சொன்னோம். ஆனாலும், கேக்காம இங்க வந்தே சண்டை போட்டு ஒருபைசாகூட குறையாம இப்பவே தரணும்னு வந்து நிக்கிறாங்க" என்றார்.
இதுகுறித்து முகாமில் உள்ள மற்றொரு பெண் கூறுகையில், "வீட்டுக்காரர் வைத்திய செலவுக்குப் பணம் வாங்குனோம். முகாம்ல இருப்பதால இந்த மாதம் பணம் செலுத்த முடியல; அடுத்தமாதம் சேர்த்து தரேன்னு சொன்னேன். ஆனாலும் அவங்க கேக்கல. `எங்களுக்குத் தெரியாது; கட்டியே ஆகணும்'னு மிரட்டுனாங்க. வேறவழியில்லாம வீட்டைச் சீரமைக்க நிவாரணமா வந்த பணத்துல தவணைய கொடுத்தேன்" என்றார்.
Sri ram nagar
இதுகுறித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் மனோகரன் கூறுகையில், ``நீலகிரி மாவட்டத்தில் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் கந்துவட்டியினர் ஊடுருவி, பெண்களைக் குறிவைத்து கடன் வழங்கி வருகிறார்கள். அவர்கள் கடனுக்கு 26% வட்டி வசூலிக்கின்றனர். தற்போது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் விதமாக மீட்பு முகாமுக்கே வந்து வட்டி வசூல் செய்ததை மாவட்ட நிர்வாகம் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.
இதுகுறித்து கேத்திபாலாடா பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் கூறுகையில், ``கடந்த சில ஆண்டுகளாக தோட்டத் தொழிலாளர்களின் ஏழ்மையைச் சாதகமாக்கிக் கடனைத் திணிக்கின்றனர். இதனால் பிறப்பு, இறப்பு என எல்லா நிகழ்வுகளுக்கும் கடன் நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்" என்றார்.
No comments:
Post a Comment