
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புத்தக பைகள் மற்றும் காலணிகள் கொள்முதலுக்கான டெண்டரை திறக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச புத்தகப்பை மற்றும் காலணிகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரி தமிழ்நாடு பாடநூல் கழகம் கடந்த மார்ச் மாதம் தனிதனியாக அறிவிப்பாணை வெளியிட்டது.
டெண்டர் நிபந்தனைகள் படி பெரிய,நடுத்தர, சிறிய என மூன்று அளவுகளில் மாதிரிகளை சமர்பிக்க வேண்டும் என்றும் அந்த மாதிரிகளில் எந்தவொரு குறியீடும் இடம்பெற கூடாது என்றும் நிபந்தனைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிபந்தனைகளை மீறி பல நிறுவனங்கள் டெண்டர் படிவங்களை சமர்ப்பித்துள்ளதால் இந்த டெண்டரை இறுதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்நிறுவனங்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் எனவும் கோரி, புத்தகப் பை கொள்முதல் டெண்டருக்காக விண்ணப்பித்த டில்லியைச் சேர்ந்த மன்ஜீத் பிளாள்டிக் தொழிற்சாலை சார்பிலும், காலணி கொள்முதல் டெண்டருக்காக விண்ணப்பித்த ஹரியானாவைச் சேர்ந்த டைமண்ட் புட் கேர் உத்யோக் நிறுவனம் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்யபட்டன.
இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. புத்தக பைகளுக்கான டெண்டருடன் சமர்ப்பிக்கபட்ட மாதிரி பைகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போதயை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைபடம் பொறிக்கபட்டுள்ளதை சுட்டிகாட்டியதால், மீண்டும் மாதிரிகளை சமர்ப்பிக்கும்படி தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவுறித்தியது சட்டவிரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
காலணி டெண்டரை பொறுத்தவரை, நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து ஒரே மாதிரியான காலணி மாதிரிகளை சமர்ப்பித்துள்ளதால் அந்த டெண்டர்களை நிராகரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி ஆதிகேசவலு, புத்தகப்பை மற்றும் காலணி கொள்முதலுக்கான டெண்டரை திறக்க கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், காலணி மாதிரிகள் எந்த ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படும் என்ற விவரத்தை அறிக்கையாக, மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
source: oneindia.com
source: oneindia.com

No comments:
Post a Comment