
பெங்களூர்: கர்நாடக வரலாற்றில் முதல்முறையாக 3 பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்கி உள்ளார் முதல்வர் எடியூரப்பா.
கர்நாடகாவில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கலைந்த நிலையில், எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.
அமைச்சர் பதவிக்கான போட்டியில் பலரும் இருந்ததால், பெரும் இழுபறிக்குப் பிறகு 20 நாட்களுக்கு பிறகு அமைச்சரவை விஸ்தரிப்பு செய்ய முடிந்தது.
இந்த நிலையில் மூன்று துணை முதல்வர்களை நியமித்துள்ளார் முதல்வர் எடியூரப்பா.கர்நாடகாவில் இதற்கு முன்பாக எடியூரப்பா தலைமையில் ஆட்சி நடைபெற்றபோது, ஈஸ்வரப்பா மற்றும் அசோக் ஆகிய இரு துணை முதல்வர்கள் பதவி வகித்தனர். ஆனால் கர்நாடக வரலாற்றில் 3 துணை முதல்வர்கள் இதுவரை பதவி வகித்ததே கிடையாது. இதுதான் முதல் முறை.
கோவிந்த கார்ஜோல், அஸ்வத் நாராயணன், லட்சுமண் சவதி ஆகிய மூவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் லட்சுமண் சவதி, சட்டசபை தேர்தலில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவரை அமைச்சரவையில் சேர்த்ததே, பலருக்கும் புருவங்களை உயரச் செய்தது.
இப்போது துணை முதல்வர் அந்தஸ்தும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த எடியூரப்பா ஆட்சி காலத்தின்போது, சட்டசபையில் செல்போனில், ஆபாச படம் பார்த்ததாக அமைச்சர் பதவியை இழந்த மூன்று பேரில் ஒருவர் லட்சுமண் சவதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
source: oneindia.com
No comments:
Post a Comment