ஆக.5, இன்று வரலாற்றில் முக்கியமான நாளாக அமைந்து விட்டது. பாஜக., தனது மூன்று முக்கியக் கொள்கைகளாக இது வரை கொண்டிருந்தவற்றில் ஒன்றை இன்று நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அது, காஷ்மீரில் 370வது சட்டப் பிரிவை நீக்குவதுதான்!
இந்நிலையில், இந்த 370வது சட்டப் பிரிவு நீக்கம் குறித்தும், காஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் மீதும் மாநிலங்களவையில் விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார். அப்போது, பிரதமர் மோடியும் மாநிலங்களவைக்கு வந்தார்.
அப்போது அமித் ஷா பேசியது… சட்டப்பிரிவுகள் '370, 35 ஏ' பிரிவுகளால் காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சொல்ல விரும்புகிறேன். காஷ்மீருக்காக மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கியது. ஆனால், அவை முறையாக பயன்படுத்தப்படவில்லை.
ஜம்மு காஷ்மீரின் நில மதிப்பு ரூ.3 லட்சத்தை தாண்டுவதில்லை என்று கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிற மாநிலங்களில் நிலத்தின் விலை ரூ.10 லட்சம் என்றால், காஷ்மீரில் ரூ.3 லட்சமாக இருக்கிறது என்றார்.
370வது பிரிவை ரத்து செய்வதன் மூலம் பெண்களுக்கு மிகுந்த நன்மை ஏற்படும் என்றும், ஜம்மு காஷ்மீரில் சிறந்த மருத்துவர்கள், மருத்துவமனைகள் இல்லை, எந்தத் துறையிலும் முன்னேற்றம் காண முடியவில்லை என்றும் வருத்தப் பட்டார் அமித் ஷா.
பெரிய பெரிய நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்ய முயல்கின்றன, ஆனால் கடந்த காலங்களில் அது நிறைவேறவில்லை; ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி இல்லாமல் போனதற்கு காரணமே 370-வது பிரிவுதான் என்று மாநிலங்களவையில் விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசியபோது அமித்ஷா குறிப்பிட்டார்.
370வது சட்டப் பிரிவு ரத்து என்பது, எந்த மதத்தையும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கவில்லை; ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீடிப்பதால்தான் பயங்கரவாதம் தொடருகிறது… என்று சுட்டிக்காட்டிப் பேசினார்.
ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர்கள் பிரதமராக முடியும்; ஆனால் பிற மாநிலங்களில் பிறந்தவர்கள் அங்கு ஒரு கவுன்சிலராக கூட ஆக முடியாது என்று குறிப்பிட்ட அமித் ஷா, மதத்தைப் பார்த்து சட்டம் கொண்டு வரவில்லை; காஷ்மீரில் இந்துக்கள், சீக்கியர்கள் என அனைவரும் இருக்கிறார்கள்; 370 சட்ட பிரிவால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றார்.
மேலும், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட யூனியன் பிரதேச அந்தஸ்தும்கூட தற்காலிகமானதுதான்! காஷ்மீரில் இயல்புநிலை திரும்பும் போது, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும்.. என்றார்.
370வது சட்டப் பிரிவு காஷ்மீரின் வளர்ச்சியைத் தடுத்தது. சட்டப்பிரிவு 370, 35ஏ மூலம் ஜனநாயகம் முழுமையாக நிலைநாட்டப்படவில்லை; எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை. சில அரசியல்வாதிகளுக்கும், பணக்காரக் குடும்பங்களுக்கும் மட்டுமே இது பயனளித்தது.
No comments:
Post a Comment