Latest News

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக பணத்தை நன்கொடையாகப் பெற்ற தேசியக் கட்சி எது? #VikatanInfographics

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தேர்தல் செலவுகளுக்காகத் தேசியக் கட்சிகள் தங்கள் பட்ஜெட்டை எப்படிக் கவனித்துக்கொண்டார்கள் என்பதை அறிக்கையாக வெளியிட்டுள்ளது ஏ.டி.ஆர் எனப்படும் ஜனநாயகச் சீர்திருத்தத்துக்கான சங்கம் (Association of Democratic Reforms) என்ற அமைப்பு.
தேர்தல் நன்கொடையாகத் தேசியக் கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன, அவற்றில் கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வளவு பணத்தை நன்கொடையாக அளித்தன என்பதைக் கணக்கிட்டு, அறிக்கையாக வெளியிட்டுள்ளது ஏ.டி.ஆர் அமைப்பு.

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடை
இந்தியாவில் தேசியக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 7 கட்சிகள், நன்கொடையாக 20,000 ரூபாய்க்கு மேல் பெற்ற பணத்தையும், அளித்தவர்களின் விவரங்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி 20,000 ரூபாய்க்கு மேல் யாரிடமும் நன்கொடை பெறவில்லை எனக் கூறியுள்ளதால், இந்த அறிக்கையில் பி.ஜே.பி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 2016 முதல் 2018 வரை, தேசியக் கட்சிகள் மொத்தமாக ஏறத்தாழ 1,059 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளன. இதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் 2,061 நன்கொடைகள் மூலம் சுமார் 985 கோடி ரூபாயை, தேர்தல் கட்சிகளுக்கு அளித்துள்ளன.

ராகுக் காந்தி - ரத்தன் டாடா (2012)
பி.ஜே.பி மொத்தமாக 969 கோடி ரூபாயையும், காங்கிரஸ் கட்சி சுமார் 69 கோடி ரூபாயையும் நன்கொடையாகப் பெற்றுள்ளன. இதில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மட்டும் பி.ஜே.பி பெற்ற நன்கொடை சுமார் 915 கோடி ரூபாய். காங்கிரஸ் கட்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் 55 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளன.
கார்ப்பரேட் நிறுவனங்கள் காங்கிரஸ் கட்சிக்கு அளித்ததைவிட பி.ஜே.பி-க்கு அளித்த நன்கொடை பணம். 16 மடங்கு!
கடந்த 5 ஆண்டுகளில், பி.ஜே.பி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சுமார் 1,548 கோடி ரூபாய் பணத்தை நன்கொடையாகப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் சுமார் 245 கோடி ரூபாய் பணத்தை வழங்கியுள்ளது. நன்கொடையாகக் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட பணம் பெரும்பாலும் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 488 கோடி ரூபாய் பணத்தைத் தேர்தல் அறக்கட்டளைகள் தேசியக் கட்சிகளுக்கு அளித்துள்ளன.

பி.ஜே.பி - காங்கிரஸ் பெற்ற நன்கொடை. தேர்தல் அறக்கட்டளைகளுக்கு அடுத்து, அதிக நன்கொடை தந்த நிறுவனங்கள் உற்பத்தித்துறை, ரியல் எஸ்டேட், சுரங்கங்கள், அறக்கட்டளைகள் முதலான துறைகளைச் சார்ந்த நிறுவனங்களாக இடம்பெற்றுள்ளன.
டெல்லியைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகளவிலான பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளன. சுமார் 481 கோடி ரூபாய் பணம் டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு அடுத்தடுத்த இடங்களில் மஹாராஷ்ட்ரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தேசியக் கட்சிகளுக்கு அளித்த நன்கொடை.17.3 கோடி ரூபாய்!
தேசியக் கட்சிகளுக்கு அதிக நன்கொடை அளித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில், 4 தேர்தல் அறக்கட்டளைகள் இடம்பெற்றுள்ளன. 'ஏர்டெல்' நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'பாரதி' குழுமம் நிர்வகிக்கும் ப்ரூடென்ட் சத்யா தேர்தல் அறக்கட்டளை, பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் பெற்று, ஏறத்தாழ 429 கோடி ரூபாய் பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதில் பி.ஜே.பி மட்டும் 405 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளது.

டாப் 5 கார்ப்பரேட் நன்கொடையாளர்கள்.
இரண்டாவது இடத்தில் பத்ராம் ஜன்ஹித் ஷாலிகா அறக்கட்டளையும் மூன்றாவது இடத்தில் ஜனதா நிர்வசக் தேர்தல் அறக்கட்டளையும் இடம்பெற்றுள்ளன.
பத்ராம் ஜன்ஹித் ஷாலிகா தேர்தல் அறக்கட்டளை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஸ்டெர்லைட் இந்தியா லிமிடெட் ஊழியர்கள் நல அறக்கட்டளை என்ற பெயரில் இயங்கி வந்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குதாரரான இந்த நிறுவனம் பி.ஜே.பி-க்கு 39 கோடி ரூபாய் பணத்தையும் காங்கிரஸ் கட்சிக்கு 2 கோடி ரூபாய் பணத்தையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.
கட்சிகள் போடும் கூட்டணிக் கணக்குகள் கட்சிகளுக்கு இடையே மட்டுமல்ல என்பதையும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையிலும் கூட்டணிகள் நிகழ்கின்றன என்பதை ஒவ்வொரு தேர்தலும் உணர்த்துகின்றன. இந்த முறையும் அது தெளிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.