
பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ் குமார் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து பாஜக ஆலோசித்து வருகிறது. அவர் தானாக முன்வந்து இந்த பதவியை காலி செய்யாவிட்டால் இந்த அதிரடி முடிவை பாஜக எடுக்கும் என கூறப்படுகிறது.
வழக்கமாக ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான் சபாநாயகர் பதவியில் இருப்பார். ஆனால், காங்கிரஸ் மஜத கூட்டணி ஆட்சியில் சபாநாயகராக நியமிக்கப்பட்ட ரமேஷ் குமார், அந்த ஆட்சி கலைந்த பிறகும், இன்னும் அதே பதவியில் தொடருகிறார்.
"சபாநாயகர் தானே ராஜினாமா செய்யாவிட்டால் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் கொண்டு வருவோம்" என்று ஆளும் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
"எங்கள் முதல் நிகழ்ச்சி நிரலே, திங்கள்கிழமை நடைபெற உள்ள நம்பிக்கை தீர்மானத்தை வென்று, உடனடியாக நிதி மசோதாவை நிறைவேற்றுவதாகும். அதன்பிறகு சபாநாயகர் தனது பதவியில் இருந்து விலகுவாரா என்று நாங்கள் காத்திருந்து பார்ப்போம். அப்போதும் அது நடக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவோம்" என்று அவர் மேலும் கூறினார்.
எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு வெள்ளிக்கிழமை ஆட்சியை பிடித்தது. அதற்கு ஒருநாள் முன்பாக, சபாநாயகர் ரமேஷ் குமார் மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார். காங்கிரஸைச் சேர்ந்த ரமேஷ் ஜர்கிஹோலி மற்றும் மகேஷ் குமத்தள்ளி மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ஆர்.சங்கர், ஆகியோர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதி நீக்க அஸ்திரத்தை வீசியிருந்தார் சபாநாயகர்.
source: oneindia.com
No comments:
Post a Comment