அதிமுக மக்களவை குழு தலைவர் ப.ரவீந்தரநாத் குமார் எம்.பி. ஜூலை 25 அன்று, மக்களவையில் தாக்கல் செய்யப் பட்ட 'இஸ்லாமியப் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா-2019'ன் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய போது, மசோதாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சில கருத்துக்களை முன் வைத்தார்.
அப்போது பேசிய அவர், வேத காலத்தில் நம் நாட்டில் பெண்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். அன்றைக்கு பொதுவாக பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டார்கள். அதிலும் குறிப்பாக சில நேரங்களில் அவர்கள் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் கூட அமர வைக்கப்பட்டார்கள்.
ஆண்களைப் போல் தங்களை வளர்த்துக் கொள்ளும் அனைத்து வாய்ப்புகளையும் பெற்றவர்களாக இருந்தார்கள். ஏன், தங்களுடைய வாழ்க்கையை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளவும், தங்களின் வாழ்க்கை துணைவரை தங்கள் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளவும் உரிமை படைத்தவர்களாகத் திகழ்ந்தார்கள்.
ஆனால் நாம் மத்திய கால வரலாற்றைப் பார்த்தோம் என்றால், சமுதாயத்தில் புகுத்தப்பட்ட மூடப்பழக்க வழக்கங்களால் மத்திய காலப் பகுதியில் பெண்களின் மதிப்பும், கௌரவமும் குறைக்கப்பட்டது.
ஆனால் 'பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும்', 'சம அதிகாரம் பெற்றவர்களாக திகழ வேண்டும்' என்ற நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் அடையாளமாக இந்த முத்தலாக் மசோதாவை நான் பார்க்கிறேன்.
பாலினம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவொரு பிரஜையிடமும் பாரபட்சம் காட்டக்கூடாது என்று நமது அரசியல் சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 15 சுட்டிக்காட்டுகிறது. அந்த அரசியல் சட்டப் பிரிவுகளின் நோக்கத்திற்கு மெருகேற்ற இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக எண்ணுகிறேன்.
'பெரும்பான்மை', 'சிறுபான்மை'' என்பது இங்கு முக்கியமல்ல. மனித நேயம்- அதாவது பெண்களின் உரிமை என்பதுதான் இங்கு முக்கியம்.
எதிர்க்கட்சிகள் பல கதைகளை இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் நம் நாட்டில் நடக்கும் வேடிக்கையான நிகழ்வு என்னவென்றால், சிலர் கடவுள் இல்லை என்கிறார்கள். ஆனால் நாம் கோவிலுக்குப் போகும் போது பார்த்தால் நமக்கு முன் முதல் வரிசையில் நின்று அதே நபர் கடவுளை தரிசித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஏன் இப்படியொரு இரட்டை வேடத்தைப் போட்டு மக்களை குழப்புகிறீர்கள்? என்பதுதான் என் கேள்வி.
பேரவைத் தலைவர் அவர்களே! உங்கள் மூலமாக எதிர்க்கட்சியினரைப் பார்த்து ஒரேயொரு கேள்வியைக் கேட்கிறேன். இதே இஸ்லாமிய சட்டம் இந்துக்களுக்கும் பொருந்துமா? எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது பற்றி பார்க்காமல் இந்த மசோதா நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் சம உரிமை பெற்றுத் தருமா? என்று கேட்க விரும்புகிறேன்.
இங்கே சிலர் பேசும் போது, அப்படியென்றால் ஆண்களுக்கு தனியாக 'ஆண்கள் அதிகாரச் சட்டம்' கொண்டு வரலாமா? என்று கேட்டார்கள். அந்தக் கேள்விக்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் மதம், ஜாதி அடிப்படையில் பெண்களுக்கு மட்டும் இந்த மசோதாவின் கீழ் உரிமை அளிக்கிறோம் என்பதை அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா இல்லையா என்பதைத்தான் நான் அறிய விரும்புகிறேன்.
பெண்களுக்கு உரிய வாய்ப்புகளை அளித்தால்- அவர்கள் ஆண்களுக்கு நிகராக மட்டுமல்ல- அவர்களுக்கும் மேலாகவே அதிகாரம் பெறுவார்கள் என்பதால் இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன்.
பெண்களின் முன்னேற்றத்திற்கான பாதையில் சமுதாய சடங்குகள் என்ற தடைக்கற்களை ஏற்படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்… என்று பேசினார்.
No comments:
Post a Comment