
காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவின் அடிப்படையில்தான் கூட்டணியின் எதிர்காலம் உள்ளது என்று மஜத தலைவர் தேவெ கௌடா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மஜத தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி அமைத்து குமாரசாமி தலைமையில் ஆட்சி செய்தனர். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் இந்த கூட்டணி நீடித்தது. ஆனால், 28 தொகுதிகளில் 1 தொகுதியை மட்டுமே இந்த கூட்டணி கைப்பற்றியது. இரண்டு கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கும் இந்த கூட்டணியில் விருப்பம் இல்லை. எனினும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி என்பதன் அடிப்படையில் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில், குமாரசாமி தலைமையிலான அரசு 14 மாதங்கள் ஆட்சி செய்த நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் 16 பேர் ராஜிநாமா செய்து நெருக்கடி உண்டாக்கினர். இதனால், பெரும்பான்மை இல்லாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா 4-வது முறையாக கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார். எடியூரப்பா அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நாளை நடைபெறுகிறது.
இதனிடையே, சபாநாயகர் ரமேஷ்குமார் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 17 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மாநிலத்தில் இருந்து வந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, காங்கிரஸ் - மஜத கூட்டணியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழத் தொடங்கியது.
இதற்கேற்றார்போல், அண்மையில் நடந்துமுடிந்த மஜத எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், ஒரு பிரிவு எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்கு வெளியே இருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், மற்றொரு பிரிவு எம்எல்ஏ-க்கள் எதிர்க்கட்சித் தலைவராகி கட்சியை பலப்படுத்துமாறும் தெரிவித்ததாக மஜத எம்எல்ஏ ஜி.டி. தேவெ கௌடா தெரிவித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் உடனான கூட்டணியின் எதிர்காலம் குறித்து மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) மூத்த தலைவர் தேவெ கௌடா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் அறிவுரையின்படி, காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே இந்த கூட்டணியின் எதிர்காலம் உள்ளது. இதுகுறித்து, தற்போதைக்கு வேறு எதுவும் கூற விரும்பவில்லை.
குமாரசாமி அதிகாரப்பூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் அல்ல. எடியூரப்பா ஆட்சியின் 3 ஆண்டு காலத்திலும் சித்தராமையாதான் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர். குமாரசாமி மஜதவின் பேரவைக் குழுத் தலைவர்" என்றார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவும் இதே நிலைப்பாட்டைத்தான் கடைபிடித்தார். இதுகுறித்து இவர் பேசுகையில், "கூட்டணி குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். அதன்படி மாநில காங்கிரஸ் செயல்படும்" என்றார்.
No comments:
Post a Comment