
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற பகுதியில், 17 வயது சிறுமி, பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கடந்த 2017ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகார் அளித்து ஒரு வருடமாகியும் குற்றவாளிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங்
இது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் தந்தை, மர்மமான முறையில் உயிரிழந்தார். அதன்பின், இந்தப் பிரச்னை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பேசப்பட்டது. உன்னாவ் சிறுமிக்கு ஆதரவாகவும், பா.ஜ.க எம்.எல்.ஏ-வை கைதுசெய்யக் கோரியும், பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
பின்னர், இந்த வழக்கை அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, குல்தீப் சிங் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சில மாதங்களாக நடந்துவந்த விசாரணைக்குப் பின், குல்தீப் சிங் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்தது, சிபிஐ. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் வேளையில் இன்று காலை பாதிக்கப்பட்ட பெண் தனது தாய் மற்றும் வக்கீலுடன் காரில் பயணமாகியுள்ளார்.
ரேபரேலி அருகே கார் செல்லும்போது லாரியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயும், வக்கீலும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அந்தப் பெண் கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார் எனக் கூறப்படுகிறது. விபத்து நடந்த நேரத்தில் மழை பெய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment