
கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் அளித்துள்ள அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா குறித்து எந்த முடிவும் தற்போது எடுக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.ராஜினாமா செய்த கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் 10 பேரும் ராஜினாமா குறித்து முடிவு எடுக்காமல் சபாநாயகர் காலம் தாழ்த்துவதாகவும், ராஜினாமா குறித்து உடனடியாக முடிவு செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நேற்று (ஜூலை 11) விசாரித்த சுப்ரீம் கோர்ட், மாலை 6 மணிக்குள் முடிவு எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டது. ஆனால். ராஜினாமா குறித்து முடிவு செய்ய தனக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காரசார வாதம் : இந்நிலையில் எம்எல்ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கை இன்று (ஜூலை 12) விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, கர்நாடக சபாநாயகர் சுப்ரீம் கோர்ட் அதிகாரத்திற்கு சவால் விடுகிறாரா? சபாநாயகரின் அதிகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட் எந்த கேள்வியும் எழுப்ப கூடாது என நினைக்கிறீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தகுதி நீக்கத்தை தவிர்க்கவே எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா என்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்க கூடாது என வாதிட்டுள்ளார். சபாநாயகர் முன் ஆஜராகி யாரும் ராஜினாமா அளிக்கவில்லை. எப்படி ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். இடைக்கால தடை : இருதரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமர்வு, எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்தது. அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என கூறி, வழக்கின் விசாரணையை ஜூலை 16 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Dailyhunt

No comments:
Post a Comment