
நக்சலைட் இயக்கத்தில் சேர சென்று அங்கு தாக்கு பிடிக்க முடியாமல் முகிலன் விரட்டி அடிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல்கள் பரப்பிவிடப்படுகின்றன.
திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து முகிலனை கண்டுபிடித்த போலீசார் தற்போது அவரை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்துள்ளனர். இதற்கிடையே முகிலன் திருப்பதியில் சிக்கியது எப்படி, அவர் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்கிற தகவல்களை போலீசார் அவ்வப்போது மாற்றி மாற்றி கூறி வருகின்றனர்.
திருப்பதி ரயில் நிலையத்தில் வைத்து சக பயணிகளிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த போது முகிலனை அம்மாநில போலீசார் பிடித்து தமிழக சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறினர். இந்த நிலையில் சென்னை அழைத்துவரப்பட்ட முகிலனிடம் நாள் முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது ஓராண்டாக சிறையில் இருந்த காரணத்தினால் மிகவும் விரக்தி மற்றும் கோபத்தில் இருந்ததாக முகிலன் கூறியதாகவும் அமைதி வழி போராட்டம் நடத்தினால் மீண்டும் சிறையில் சித்ரவதைகளை அனுபவிக்க நேரிடம் என்று நினைத்ததாகவும் முகிலன் சொன்னதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்து அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க முயன்றதாகவும் இதற்காகவே ஆந்திரா சென்றதாகவும் முகிலன் கூறியதாகவும் ஆனால் நக்சலைட்டுகளுடன் இரண்டு மாதங்களுக்கு மேல் தன்னால் இருக்க முடியவில்லை என்றும் இதனால் 500 ரூபாய் பணம் கொடுத்து புதிய சட்டை பேண்ட் வாங்கி கொடுத்து அவர்கள் தன்னை விரட்டி விட்டதாகவும் முகிலன் கூறியதாகவும் போலீசார் தகவல்களை பரப்பி வருகின்றனர்.
ஆனால் கடந்த ஐந்து மாதகாலமாக முகிலன் சட்டவிரோத தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும், உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணை தீவிரமாகியுள்ள நிலையில் தொடர்ந்து அவரை மறைத்து வைத்திருக்க முடியாது என்பதால் போலீசார் தற்போது திருப்பதியில் வைத்து அவரை பிடித்தது போல் செட் அப் செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
வெளியே விட்டால் உண்மைகள் வெளியாகிவிடும் என்பதால் பாலியல் புகாரில் அவரை கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ சுற்றுச் சூழலுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு நபர் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையில் அதிர்ச்சியையும் ஆசுவாசத்தையுமே நமக்கு ஏற்படுத்துகிறது.
Dailyhunt

No comments:
Post a Comment