
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கடந்த 23ம் தேதி கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதனால் முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். கூட்டணி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து பா.ஜனதா உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீண்ட ஆலோசனைக்கு பின்பு பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவை முதல்-மந்திரியாக பதவி ஏற்க அனுமதி வழங்கியது. எடியூரப்பாவும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
ஆனால் மந்திரிகளாக யாரும் பதவி ஏற்கவில்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த பின்பு மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 31-ம்தேதி வரை அவகாசம் கொடுத்திருந்தாலும் கூட எடியூரப்பா நாளை (திங்கட்கிழமை) பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே மூன்று எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் இன்று மேலும் 14 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இப்போது சட்டசபையில் உறுப்பினர்களின் பலம் 207-ஆக குறைந்துள்ளது. இப்போதைய நிலவரப்படி சட்டமன்றத்தில் பாரதீய ஜனதா உறுப்பினர்களின் எண்ணிக்கை 105. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 100-ஆக உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியில் 66, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் 37 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களுள் சபாநாயகரும் அடங்குவார். இவர்கள் தவிர்த்து ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. மற்றும் ஒரு பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. ஒருவரும் உள்ளனர்.
சுயேச்சை எம்.எல்.ஏ. ஆதரவு பாரதீய ஜனதாவுக்கு கிடைப்பதால் அக்கட்சியின் பலம் 106-ஆக அதிகரித்துள்ளது. 106 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் எடியூரப்பா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது.இந்நிலையில் சட்டசபையில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்பேன் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். பெங்களூருவில் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபையில் 100 சதவிதம் பெரும்பான்மையை நீருபிப்பேன். அதன்பின்னர் நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment