
தமிழக தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் ஜூன் மாதம் 30ம் தேதியோடு (நாளையோடு) ஓய்வு பெறுகிறார்.
ஜூன் 29, 30ம் தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று கிரிஜா வைத்தியநாதனுக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது.
தற்போதுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர், கிரிஜா வைத்தியநாதன். 1981-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மாநில அரசின் பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 23-இல் பொறுப்பேற்றார். இம்மாதம் அவர் ஓய்வு பெறுவதை அடுத்து, அவர் மத்திய அரசுப் பதவியில் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிஜா வைத்தியநாதனின் வாழ்க்கை வரலாறு...
சென்னையை சொந்த ஊராகக் கொண்ட கிரிஜா, கடந்த 1959 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி பிறந்தார். 1981 ஆம் ஆண்டில் சென்னை ஐ.ஐ.டி.-இல் முதுநிலை இயற்பியல் பட்டம் பெற்றார்.
இயற்பியல் பட்டம் பெற்ற அந்த ஆண்டே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வு பெற்ற போதும், கல்வியின் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் தொடர்ந்து பல்வேறு படிப்புகளைப் படித்தார்.
1993-ஆம் ஆண்டு பட்டயக் கணக்கியல் ஆய்வர் படிப்பையும், 2011-ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் சுகாதார பொருளாதாரவியல் படிப்பில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
கல்வியின் மீது கொண்ட தணியாத ஆர்வம் அவரை ஐ.ஏ.எஸ். தேர்வில் தேசிய அளவில் ஒன்பதாவது இடத்தில் தேர்ச்சி பெற வைத்தது. மேலும், பெண் தேர்வர்களில் முதல் நபராக தேர்வானார்.
பணியாற்றிய இடங்கள்: ஐ.ஏ.எஸ்., தேர்வில் சிறப்பான இடம்பெற்ற கிரிஜா வைத்தியநாதன், தனது பணியை திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து தொடங்கினார். 1983-1984-ஆம் ஆண்டில் திருவள்ளூரில் உதவி ஆட்சியராக இருந்தார். இதன் பின், 1985-86-ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பொது மேலாளராக இருந்தார்.
1986 முதல் 1989-ஆம் ஆண்டு வரையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணை நிர்வாக இயக்குநராகவும், 1991-ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து ஜூலை வரையில் இந்திய மக்கள் தொகை திட்ட இயக்குநராகவும் பணியாற்றினார்.
மதுரை ஆட்சியர்: 1991 ஜூலை முதல் 1992 செப்டம்பர் வரையில் மதுரை மாவட்ட ஆட்சியராகவும், அதன் பின், கலை-கலாசாரத் துறை இயக்குநராகவும் பணியாற்றினார். 1992 முதல் 1995 வரையில் நிதித் துறை இணைச் செயலாளராகவும், 1995 ஆகஸ்ட் முதல் 1996 ஜூன் வரையில் கல்வித் துறை கூடுதல் செயலாளராகவும், 1996 முதல் 1999 வரையில் சர்க்கரைத் துறை ஆணையாளராகவும் கிரிஜா வைத்தியநாதன் பணியாற்றினார்.
முக்கியத் துறைகளுக்கு பொறுப்பேற்பு: 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் பல முக்கியத் துறைகளின் செயலாளர் பொறுப்புகளை வகித்தார். சுற்றுச்சூழல்-வனத் துறை, சுகாதாரம்-குடும்பநலத்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றின் செயலாளர் பொறுப்புகளை வகித்தார்.
இதன்பின்பு, 2006 ஆம் ஆண்டில் இருந்து பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர், மாநில திட்டக் குழு உறுப்பினர் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றினார்.
2011-ஆம் ஆண்டு ஜூனில் சுகாதாரம்-குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளராக ஓராண்டு காலத்துக்கு பணியாற்றினார். இதன்பின், 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு மே வரையில் தமிழ்நாடு மின் நிதி-கட்டமைப்புக் கழகத்தின் தலைவர்-நிர்வாக இயக்குநராகவும், அதன்பின் நில நிர்வாக ஆணையாளராகவும் கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றார்.
பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்: கிரிஜா வைத்தியநாதன், பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை வெங்கட்ரமணன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர்.
1990 முதல் 1992-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அவர் ரிசர்வ் வங்கிக்கு பொறுப்பு வகித்தார்.
சென்னை ஐ.ஐ.டி.,யில் முதுநிலை படிப்பையும், சுகாதார பொருளாதாரவியல் படிப்பில் முனைவர் பட்டத்தையும் மேற்கொண்டதால் சுகாதாரத் துறையில் காப்பீட்டு போன்ற பல திட்டங்களுக்கு காரணகர்த்தாவாக விளங்கினார்.
No comments:
Post a Comment