ஐதராபாத்: பாகிஸ்தானில் இருக்கும் தனது மருமகள் இந்தியாவிற்கு வர
உதவ வேண்டும் என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிற்கு பெண்
ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த பெண்மணி வாஹத்
உனிசா. இவர் தான் தன்னுடைய பாகிஸ்தான் மருமகள் இந்தியாவிற்கு வர, உதவ
வேண்டும் என மத்திய அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தனியார் ஊடகம்
ஒன்றிற்கு அப்பெண் பேட்டியளித்துள்ளார்.
அப்பேட்டியில் கடந்த
2011-ம் ஆண்டு தனது மகனை பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணிற்கு திருமணம் செய்து
வைத்ததாக கூறினார். திருமணத்திற்கு பின்னர் இந்தியாவிலேயே தங்கியிருந்த
மருமகள் 2 குழந்தைகளை ஈன்றெடுத்தார்.
கடந்த ஆண்டு வரை தனது பாகிஸ்தான் மருமகள் எங்களுடன் இந்தியாவில் தான் இருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்த அவரது தந்தைக்கு திடீரென
உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து தனது இரு குழந்தைகளுடன் கடந்த
டிசம்பர் மாதம் எனது மருமகள் பாகிஸ்தான் சென்றுவிட்டார்.
தற்போது
எனது மருமகள் மீண்டும் இந்தியா திரும்ப விரும்புகிறார். எனது
பேரக்குழந்தைகள் இந்திய குடிமகன்கள். எனவே அவர்கள் இந்தியா திரும்புவதில்
பிரச்னை இல்லை. ஆனால் எனது மருமகள் மீண்டும் இந்தியா திரும்ப விசா
வேண்டும்.
ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தியா -பாகிஸ்தான்
நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக அவருக்கு விசா கிடைப்பதில்
சிக்கல் உள்ளது. எனது மருமகளுக்கு விசா வழங்குவதில் சிக்கல் உள்ளதாக இந்திய
தூதரகம் கூறியுள்ளது. எனவே மருமகள் இந்தியா திரும்ப ஏதுவாக உதவி
செய்யுமாறு கோரியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை தலையிட்டு, தனது
மருமகளின் விசா பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என பேட்டியின் மூலம்
சுஷ்மாவிடம், வாஹத் உனிசா கோரியுள்ளார். ஏற்கனவே விசா உள்ளிட்ட
பிரச்னைகளால் வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்கள் பலர், மத்திய அமைச்சர்
சுஷ்மா சுவராஜிடம் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடுமான வரை
அவர்களின் பிரச்னை தீர்க்கப்பட்டு இந்தியா திரும்பியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
source: oneindia.com
No comments:
Post a Comment