இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக் கடலில் நிலை
கொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று தாழ்வு
மண்டலமாக மாறியுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் புயல்
சின்னமாக மாறி, 27 மற்றும் 28ம் தேதிகளில் வட தமிழகம் மற்றும் ஆந்திரா
நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல்
சின்னம் சென்னைக்கு அருகே கரையைக் கடந்தால் தமிழகத்துக்குத் தேவையான
தண்ணீர் கிடைக்கும் என்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் தாகத்தோடு
ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமோ, சென்னைக்கு வருவேன் ஆனால் வரமாட்டேன்
என்று போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது.
இந்த
நிலையில், அதன் தேவை என்ன, தமிழகத்துக்கு குறிப்பாக சென்னைக்கு அருகே
வந்தே தீர வேண்டும் என்ற அவசியம் என்ன, வந்தால் என்ன நடக்கும், வராவிட்டால்
என்ன நடக்கும் என்பதை 24 மணி நேரத்தில் உருவாகவிருக்கும் புயல்
சின்னத்திடமே நேரடியாக சொல்லிவிடலாம் என்பதே எங்கள் நோக்கமாக உள்ளது.
அதாவது
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக இருப்பது வீராணம் மற்றும் புழல்
உள்ளிட்ட ஏரிகளின் நீர் மட்டம்தான். அதிலும், வீராணம் ஏரி முற்றிலும்
வறண்டு தற்போது பம்பு செட்டுகள் மூலம்தான் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சோழவரம் ஏரியில் இருந்து 3 மோட்டார்கள் மூலம் தண்ணீர்
எடுத்து புழல் ஏரிக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. அங்கும் ஒரு குட்டை
அளவுக்குத்தான் கண்ணங்கரேல் என்று தண்ணீர் தேங்கியுள்ளது.
அந்த
தண்ணீர் புழல் ஏரிக்கு வந்ததும், அங்கிருந்து 8 மோட்டார்கள் மூலம் மெட்ரோ
சுத்திகரிப்பு ஆலைக்கு அந்த கருத்தத் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அது
சுத்திகரிக்கப்பட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் முறை வைத்து
அனுப்பி வைக்கப்படுகிறது.
இப்படியே இந்த நடைமுறை இன்னும்
எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்றால், சரியாக சொல்ல வேண்டும் என்றால்
அதிகபட்சமாக இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகக்
கூறப்படுகிறது. ஏற்கனவே நீர் நிறைந்திருக்க வேண்டிய நிலையில் மேய்ச்சல்
நிலமாக மாறியிருக்கிறது சோழவரம் ஏரி. இன்னும் ஓரிரு நாட்களில் புழல்
ஏரியும் அந்த நிலைக்கு வந்துவிடும்.
எனவே இன்னும் ஒரு சில
நாட்களில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை பெய்தால்
மட்டுமே ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, சென்னைவாசிகளுக்கு தொடர்ந்து
குடிநீர் அனுப்பும் பணியைச் செய்ய முடியும்.
இல்லையென்றால்..
கல் குவாரிகளில் இருக்கும் சொற்ப தண்ணீரைத்தான் மீண்டும் நாட வேண்டும்.
அதுவும் தீர்ந்து போனால்.. அப்படி ஒரு மாற்று வழி இன்னும்
கண்டுபிடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
எனவே, கணம்
புயல் சின்னம் அவர்களே, தயவு கூர்ந்து உங்களது கடைக்கண்ணை தமிழகத்தின் மீது
செலுத்தி, மரணத்தின் உச்சியில் நிற்கும் ஏரி, குளங்களைக் காப்பாற்றி
தமிழகத்துக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் ஒருமித்த
வேண்டுகோளாக உள்ளது.
No comments:
Post a Comment