
சென்னை:
கமீலா நாசருக்கு ஓட்டு போடாதீர்கள் என பிரச்சாரம் செய்வதற்காக ஒரு
குடும்பத்தையே வீதிக்கு இழுத்துள்ளது கேவலம் என நடிகர் நாசர்
தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய
சென்னை வேட்பாளராக நடிகர் நாசரின் மனைவி கமீலா போட்டியிடுகிறார். இந்த
நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கமீலா மீதும், நாசர் மீதும் அவரது
தம்பி ஜவஹர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அப்போது அவர்
கூறுகையில் நாசர் திருமணமானதிலிருந்து அவரது தாய், தந்தையை கவனித்து
கொண்டது கிடையாது. அவரது குழந்தைகளும் தாத்தா, பாட்டியை ஓரிரு முறைதான்
பார்த்துள்ளனர். எங்கள் குடும்பத்தை பிரித்ததே கமீலாதான்.

இப்படி
மாமனார் , மாமியாருக்கு எதையும் செய்யாத கமீலா நாட்டுக்கு என்ன செய்துவிட
போகிறார். எனவே சிந்தித்து வாக்களியுங்கள் என வீடியோ மூலமும்,
செய்தியாளர்கள் சந்திப்பின் மூலமும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக
தற்போது நாசர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,
என்னை அறிந்தோர் புரிந்தோர் எல்லோருக்கும் என் வணக்கங்கள். சமீபகாலமாக என்
குடும்பம்சார் பிரச்சினைகள் எல்லா ஊடகங்களிலும் வந்து கொண்டிருக்கின்றன.

கமீலா
நாசருக்கு "ஓட்டுப் போட்டுவிடாதீர்கள்" என்ற ஒரு செய்தியை கடத்தவே ஒரு
குடும்பத்தை வீதிக்கு இழுப்பது கேவலம் என்று கருதுகிறேன். இதற்கு பின்னால்
ஆதாயம் பெறும் அரசியல் வித்தகர்கள் பின் நின்று ஆட்டுவிக்கிறார்கள் என்று
நான் எண்ணுவது இயற்கையானது.

நாசரின்
நிழலின் கீழ் வளர்ந்தவர் அல்ல கமீலா. என்னைப் போலவே அவருக்கான தனித்துவம்,
தனித்திறன் இருக்கிறது. நான், அல்லது நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற
குற்றச்சாட்டை விளக்க என் 40 வருட வாழ்க்கையை உங்களுக்கு சொல்ல வேண்டும்.
அதற்கான தருணம் இதுவல்ல. ஆனால், நான் விளக்குவேன்.

உரிய
நேரத்தில் உரியவர்க்கு செய்ய வேண்டியது செய்யப்பட்டது. குடும்பத்தில்
ஒருவருடைய பலமான தூண்டுதல் பேரிலேயே என்னுடைய கடமை தடை செய்யப்பட்டது.
அதைமீறியும் என் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.

பல
விஷயங்கள் மறைக்கப்பட்டு, நடந்த சில விஷயங்கள் திரிக்கப்பட்டு, வலு
சேர்க்க சிலவற்றை புனையப்பட்டு, இச்சகதி எங்கள் மேல் வீசப்பட்டிருக்கிறது.
வேட்பாளர் ஒருவர் மீது சுமத்துவதற்கு பழி ஒன்றும் கிடைக்காத போது வீசப்பட்ட
சக்தி எங்கள் பொது வாழ்க்கைக்கு கிடைத்த பரிசென்றே கருதுகிறேன்.

தேர்தலை
முன் வைத்து வீசப்பட்ட இச்சக்தி தேர்தல் வரை எங்கள் மீதே கிடந்து
நாறட்டும். என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை நான் உணரவே
செய்கிறேன். தேர்தல் நிறைவுறட்டும், நானும் கமீலாவும் வேறு கிரகத்திற்கு
பறந்து செல்லப்போவதில்லை. எதிர்கொள்ள தின்மையும் இருக்கிறது. தெளிவும்
இருக்கிறது. இப்போதைக்கு இவ்வளவே என்று தனது அறிக்கையில் நாசர்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment