
நேரடி ஐபிஎஸ் பதவிகளுக்கு, பதவி உயர்வின் மூலம் ஐபிஎஸ்
அந்தஸ்து பெறும் அதிகாரிகளை நியமிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு,
டிஜிபி ஜாங்கிட் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக
போக்குவரத்துத் துறை ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநராகவும், டிஜிபியாகவும்
இருக்கும் ஜாங்கிட், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா
வைத்தியநாதனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழக
காவல்துறையில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரிடமிருந்து ஐபிஎஸ்
அதிகாரிகள் சங்கத்திற்கு பல்வேறு முறையீடுகள் வந்திருப்பதாக அவர்
குறிப்பிட்டுள்ளார். நேரடி ஐபிஎஸ் அதிகாரிகள் தேவையான அளவிற்கு இருந்தும்,
தமிழக காவல்துறையில் உள்ள முக்கியப் பதவிகள், பதவி உயர்வு மூலம் ஐபிஎஸ்
அந்தஸ்து பெறுபவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்
நேரடியாக ஐபிஎஸ் பட்டம் பெற்ற இளம் அதிகாரிகள் மிகுந்த
சிரமத்திற்குள்ளாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையான ஐபிஎஸ் அதிகாரிகள்
இல்லாத சூழலில் மட்டுமே பதவி உயர்வால் ஐபிஎஸ் அந்தஸ்து பெற்றவர்கள்
நியமிக்கப்பட வேண்டுமென்பதே சட்டம் என கடிதத்தில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் உரிய
சட்டவிதிகள் கடைபிடிக்குமாறு அதில் வலியுறுத்தப் பட்டுள்ளது. இதை
அமல்படுத்தவில்லை எனில், சட்ட நடவடிக்கைகளை அணுக வேண்டிய நிலை ஏற்படும் என
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment