
தமிழகத்தில் பிராந்திய கட்சிகளைவிட தேசியக் கட்சிகள் வலுவாக
இருக்கும் மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாக கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கு
முன்பு வரை கோயம்புத்தூர் கருதப்பட்டது.
குறிப்பாக பாஜக மற்றும்
கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசியல் ரீதியாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும்
அமைப்பு ரீதியாக வலுவாக இருக்கும் தொகுதி கோயம்புத்தூர்.
அவையனைத்தும்
சமீப காலங்களில் மாறியுள்ளன. இப்போது மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள்,
மேற்குத் தமிழகத்தில் மட்டுமே செல்வாக்குடன் இருக்கும் சில பிராந்தியக்
கட்சிகள் என அனைத்துமே கோயம்புத்தூரில் கணிசமாக வாக்கு வங்கியைக்
கொண்டுள்ளன.
19,31,558 வாக்காளர்கள்
உள்ள இந்த தொகுதியில், 9,65,120 ஆண்கள், 9,66,239 பெண்கள் மற்றும் 199
மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை - வடக்கு,
கோவை - தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது
கோயம்புத்தூர். இவற்றில் எதுவும் தனித் தொகுதி அல்ல.
தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | இரண்டாம் இடம் | கட்சி |
---|---|---|---|---|
1951-52 | தி. அ. இராமலிங்கம் செட்டியார் | காங்கிரஸ் | போட்டி இல்லை | - |
1952 இடைத் தேர்தல் | என்.எம். லிங்கம் | காங்கிரஸ் | பார்வதி கிருஷ்ணன் | இந்திய கம்யூனிஸ்ட் |
1957 | பார்வதி கிருஷ்ணன் | இந்திய கம்யூனிஸ்ட் | ||
1962 | ராமகிருஷ்ணன் | காங்கிரஸ் | பார்வதி கிருஷ்ணன் | இந்திய கம்யூனிஸ்ட் |
1967 | கே. ரமணி | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | ந. மகாலிங்கம் | காங்கிரஸ் |
1971 | பாலதண்டாயுதம் | இந்திய கம்யூனிஸ்ட் | ராமசாமி | ஸ்தாபன காங்கிரஸ் |
1974 இடைத் தேர்தல் | பார்வதி கிருஷ்ணன் | இந்திய கம்யூனிஸ்ட் | - | - |
1977 | பார்வதி கிருஷ்ணன் | இந்திய கம்யூனிஸ்ட் | லட்சுமணன் | ஸ்தாபன காங்கிரஸ் |
1980 | ரா. மோகன் | திமுக | பார்வதி கிருஷ்ணன் | இந்திய கம்யூனிஸ்ட் |
1984 | சி.கே. குப்புசாமி | காங்கிரஸ் | ஆர். உமாநாத் | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் |
1989 | சி.கே. குப்புசாமி | காங்கிரஸ் | ஆர். உமாநாத் | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் |
1991 | சி.கே. குப்புசாமி | காங்கிரஸ் | கே. ரமணி | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் |
1996 | ராமநாதன் | திமுக | சி.கே. குப்புசாமி | காங்கிரஸ் |
1998 | சி.பி. ராதாகிருஷ்ணன் | பாஜக | கே.ஆர். சுப்பய்யன் | திமுக |
1999 | சி.பி. ராதாகிருஷ்ணன் | பாஜக | ஆர். நல்லகண்ணு | இந்திய கம்யூனிஸ்ட் |
2004 | கே. சுப்பராயன் | இந்திய கம்யூனிஸ்ட் | சி.பி. இராதாகிருஷ்ணன் | பாஜக |
2009 | பி. ஆர். நடராஜன் | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | ஆர். பிரபு | காங்கிரஸ் |
2014 | நாகராஜன் | அதிமுக | சி.பி. ராதாகிருஷ்ணன் | பாஜக |
தேசியக் கட்சிகளின் செல்வாக்கு
மாநிலக்
கட்சிகளைவிடவும் தேசியக் கட்சிகள் கட்சிகளே கோவை மக்களவைத் தொகுதியை அதிக
முறை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளன.
இதுவரை முடிந்துள்ள 16 மக்களவைகளிலும், இருபெரும் திராவிடக் கட்சிகளும் இந்தத் தொகுதியில் மூன்று முறை மட்டுமே வென்றுள்ளன.
திமுக இரண்டு முறையும் அதிமுக ஒரு முறையுமே கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன.
பிற தேர்தல்களில் இந்தக் கட்சிகள் தோல்வியைத் தழுவியுள்ளன அல்லது அவற்றின் கூட்டணிக் கட்சிகளே வென்றுள்ளன.
1980இல் நடந்த ஏழாவது பொதுத் தேர்தல் மற்றும் 1996இல் நடந்த 11வது பொதுத் தேர்தல் ஆகியவற்றில் திமுக இங்கு வென்றுள்ளது.
முதல்
மற்றும் ஐந்தாவது நாடாளுமன்றங்களின் பதவிக்காலங்களில் நடைபெற்ற
இடைத்தேர்தல்கள் உள்பட இதுவரை, கோவை 18 தேர்தல்களைச் சந்தித்துள்ளது.
அவற்றில்
அதிகபட்சமாக இந்திய தேசிய காங்கிரஸ் ஆறு முறை வென்றுள்ளது. கம்யூனிஸ்டு
கட்சிகள் இங்கு ஏழு முறை வென்றுள்ளன. (இந்திய கம்யூனிஸ்டு - 5 முறை.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு - 2 முறை.)
1998இல் அதிமுக கூட்டணியுடனும், 1999இல் திமுக கூட்டணியுடனும் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இங்கு வென்றுள்ளார்.
கோயம்புத்தூரும் கம்யூனிஸ்ட்டுகளும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வதி கிருஷ்ணன் கோவை தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டு, மூன்று முறை வென்றுள்ளார்.
இவர்
சுதந்திரத்துக்கு முன்பு பிரிக்கப்படாத மதராஸ் மாகாணத்துக்கு முதலமைச்சராக
இருந்த பி. சுப்பராயனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவில்
1975இல் நடந்த சர்வதேச பெண்கள் ஆண்டு மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக
கலந்துகொண்டார், அப்போதைய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பார்வதி கிருஷ்ணன்.
சமீப
ஆண்டுகளில் அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்தாலும், தொழில்வளர்ச்சி
மிகுந்த இந்தத் தொகுதியில் இடதுசாரிகள் இன்னும் தொழிற்சங்க ரீதியாக வலுவான
அமைப்பையே கொண்டுள்ளன. கடந்த காலங்களில் இடதுசாரிகள் அங்கம் வகித்த
கூட்டணிகளில் இந்தத் தொகுதி அவர்களுக்கே ஒதுக்கப்பட, இதுவே காரணம்.
காங்கிரஸ்
கட்சியும் முன்பு இங்கு தொழிற்சங்க ரீதியில் முன்பு வலுவாகவே இருந்தது.
தற்போது கட்சி, தொழிற்சங்கம் ஆகிய இரண்டிலும், முன்பைவிட அமைப்பு ரீதியில்
வலு இழந்துள்ளது என்றே கருதப்படுகிறது.
1984 மற்றும் 1989 ஆகிய தேர்தல்களில் கோவையில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். உமாநாத், இரண்டு முறையும்
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சி.கே. குப்புசாமியிடம் தோல்வியைத்
தழுவினார்.
இந்த இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியிலும் இருந்தன.
ஜெயலலிதா
தலைமையிலான அதிமுக, அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி
அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதால் மத்தியில் ஆட்சி
கவிழ்ந்தபின், 1999இல் நடந்த 13வது மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி
சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச்
செயலர் ஆர். நல்லகண்ணு, பாஜகவின் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்.
சூழலியல் பிரச்சனைகள்
கோவையைச்
சுற்றியுள்ள பகுதிகளில் பல அமைப்புகள், செங்கல் சூளைகள், வேளாண் நிலங்கள்,
பண்ணைகள் மற்றும் கல்வி நிறுவங்கள் காடுகளை ஆக்கிரமித்து
அமைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து சூழலியலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
யானைகள் வலசைப் பாதைகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அவர்கள்
கூறுகின்றனர். யானை - மனித மோதல்கள் இங்கு அடிக்கடி நிகழ்வது
செய்தியாகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடருக்கு மிகவும்
அண்மையில் அமைந்துள்ள கோவையில், மலையும் வனப்பரப்பும் ஆக்கிரமிப்புக்கு
உள்ளாகியுள்ளதாக சமீப ஆண்டுகளில் எண்ணற்ற போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன.
'குளு
குளு கோவை' என்று கோவையை விரும்புபவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட கோவைப்
பகுதி சமீப ஆண்டுகளில் அதிக வெப்ப நிலையைச் சந்தித்து வருகிறது. சூழலியல்
பிரச்சனை முக்கிய பிரச்சனையாக தற்போது இல்லாவிட்டாலும், இந்தத் தேர்தலில்
அதுவும் ஒரு விவாதப் பொருளாகவே உள்ளது.
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு
சிறு,
குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இங்கு அதிகமாக உள்ளன. பண மதிப்பு
நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியால் உற்பத்தித் துறை சமீப
காலங்களில் சரிவையும், வேலை இழப்பையும் சந்தித்தன.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சிறு-குறு தொழில்கள் அமைந்துள்ள பகுதிகளில் கோயம்புத்தூரும் ஒன்று.
பெரும்பாலும்
ரொக்கமாகவே வரவு - செலவு செய்து வந்த கோவை தொழில் வட்டாரங்களில் பணமதிப்பு
நீக்கம் அமலானபின் தொழில்கள் முடங்கி பல்லாயிரக்கணக்கான வேலை இழப்பு
நிகழ்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கிரைண்டர், வாகனங்களுக்கான
ரேடியேட்டர், வேளாண் பம்புகள் ஆகியவற்றின் உற்பத்திக்காக இந்திய அளவில்
அறியப்பட்ட கோவையின் இன்னொரு முக்கியமான அடையாளம் ஜவுளி மற்றும் தறி ஆகியன.
பணமதிப்பு
நீக்கம் செய்யபட்ட சமயத்தில், அதிகரித்து வந்த பருத்தி விலை,
நெசவாளர்களுக்கு போதிய கூலி கொடுக்கப்படாதது ஆகிய பிரச்சனைகளால் ஏற்கனவே
சிக்கலை எதிர்கொண்டிருந்தது கோவை.
சமீபத்திய தேர்தல்கள்கு
2014இல்
அதிமுக 36.69% வாக்
களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்
போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 33.12% வாக்குகளையும்
பெற்றனர். அவரே இந்த முறை அதிமுக கூட்டணியில், பாஜக சார்பில்
போட்டியிடுகிறார்.
2009இல் அதிமுக கூட்டணியில் நின்று வென்ற
மார்க்சிட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர். நடராஜன், 2014இல் தனித்து நின்று
பதிவான வாக்குகளில் 2.91% மட்டுமே வென்றார். திமுக கூட்டணியில் கோவையில்
போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி அவருக்கே மீண்டும் வாய்ப்பு
வழங்கியுள்ளது.
2009இல் திமுக கூட்டணியில் நின்ற காங்கிரஸ்
வேட்பாளர் பிரபு தோல்வியடைய, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் ஈ.ஆர்.
ஈஸ்வரன் 15.54% வாக்குகள் பெற்று, திமுகவுக்கு ஆதரவான வாக்குகளைப்
பிரித்ததும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. ஈஸ்வரன் இப்போது கொமுகவில்
இருந்து பிரிந்து தொடங்கியுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுக
கூட்டணியில் உள்ளது.
No comments:
Post a Comment