
மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட
கோரி சென்னையில் இருந்து மதுரை வரும் இன்டிகோ விமானத்திற்குள் புகுந்து
பார்வார்ட் பிளாக் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை
விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக்கோரி
முக்குலத்தோர் சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த
நிலையில், சென்னையிலிருந்து திருச்சி வழியாக இன்று சென்ற இன்டிகோ
விமானத்திற்குள் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் முருகன் ஜி
தலைமையில் பயணிகள்போல போராட்டக்காரர்கள் சிலர் இருந்துள்ளனர்.
விமானம் திருச்சியை கடக்கும்போது திடீரென கொடிபிடித்து உள்ளேயே போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.
முத்துராமலிங்கத்தேவருக்கு ஜே என கோஷமிட்டனர். இதனால்,
பதட்டமடைந்த விமான ஊழியர்கள், சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களுக்கு
தகவல் தெவித்துள்ளனர்.
மதுரை
விமான நிலையத்தில் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர
காண்காணிப்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர். பெருங்குடி காவல் நிலைய
காவலர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.
இதனால் மதுரை
விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விமானம் தரை இறங்கிய
பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் போலீசார்
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மதுரை விமான நிலையத்தில் குவிந்த
ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். முருகன்ஜி மற்றும்
அவருடன் சேர்ந்து விமானத்தில் கோஷமிட்ட 8 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சக பயணிகளையும் பீதிக்குள்ளாக்கியது.
source: oneindia.com
No comments:
Post a Comment