
இந்த முறை எம்பி தேர்தலில் அதிமுகவில் அரசியல் வாரிசுகளின் பிரவேசம்
எக்கச்சக்கம் என்று சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா இருந்தபோது மூத்த தலைகளின் வாரிசுகளுக்கு அவ்வளவு சீக்கிரம்
பொறுப்புகள் வந்து சேராது. குறிப்பாக ஒரு பிரபலத்தின் வாரிசு என்ற
அடிப்படையில் வைத்தே அவருக்கு எந்தவித பொறுப்பும் பதவியும் தரப்படாது.
அதேபோல வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவதும் பலகட்ட சோதனைகள்,
தேர்ச்சிகளுக்கு பிறகுதான் அவரது பெயரையே லிஸ்ட்டில் கொண்டுவருவார்
ஜெயலலிதா.
ஆனால் இப்போது அப்படி இல்லை.. யார் அப்பா செல்வாக்கானவர் என்றால்
மகன்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ ரொம்ப ஈசியாக சீட் கிடைத்து விடுகிறது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் தேனியில் களம் காண
உள்ளார். (ஓபிஎஸ் இன்னொரு மகன், மற்றும் தம்பி ராஜா வேறு பொறுப்புகளில்
உள்ளனர்).
நத்தம் விஸ்வநாதன்
அதேபோல ராஜன் செல்லப்பா மகன் ரா.சத்தியனுக்கு இந்த முறை வாய்ப்பு
தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அப்படி தரப்படும் பட்சத்தில் மதுரை எம்பி
தொகுதியில் அவர் நிறுத்தப்படலாம் எனதெரிகிறது. அவ்வாறு இல்லையென்றால்,
இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் அவர் நிறுத்தப்படலாம் என
கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மருமகன் கண்ணன்
திண்டுக்கல் தொகுதியில் நிறுத்தப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
உறவினர்களுக்காக மனு
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை சின்னதம்பியும் கரூர் தொகுதியில்
நிறுத்தப்பட உள்ளார். (இந்த தொகுதியில் வரும் தேர்தலில் தம்பிதுரை
நிறுத்தப்படுவாரா? அல்லது நிறுத்தப்பட்டால் சின்னதம்பியை மீறி
தம்பிதுரைக்கு முழுஒத்துழைப்பினை அதிமுக தருமா என தெரியவில்லை) அதேபோல,
அமைச்சர்கள் வேலுமணி, எம்சி சம்பத், சண்முகம் போன்றவர்கள் தங்களது
உறவினர்களுக்கு சீட் கேட்டு மனு செய்திருக்கிறார்கள்.

உழைப்பது வீணா?
திமுக போலவே அதிமுகவிலும் அமைச்சர்கள், நிர்வாகிகளின் வாரிசுகள்
களமிறக்கப்படுவதாகவும், முன்புபோல உழைப்புக்கு மரியாதை கிடையாது என்றும்
அதிமுகவின் மூத்த மற்றும் தீவிர தொண்டர்கள் புலம்ப
ஆரம்பித்திருக்கிறார்கள், இப்படி ஆளாளுக்கு சொந்தக்காரர்களை செல்வாக்கை
வைத்து களமிறக்கி விட்டால், கட்சிக்காக காலங்காலமாக உழைப்பது என்பது
வீண்தானே என்று கேள்வி எழுப்புவதுடன், பேசாமல் டிடிவி தினகரன் பக்கமே
போய்விடலாமா என்றும் யோசித்து வருகிறார்களாம்.

ஒற்றுமையின்மை
இதற்கு என்னதான் தீர்வு என்று நாம் சில அதிமுக தொண்டர்களை அணுகி கேட்டபோது,
"ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே ஈகோ பிரச்சனையும், பனிப்போரும் நிறைய இருக்கு.
இதுதான் முக்கியமான காரணம். இவங்க இப்படி ஒத்துமை இல்லாம இருக்கறதாலதான்,
நிறைய கோஷ்டிகள் உருவாக ஆரம்பிச்சிடுச்சு. மாவட்ட, கிளை ரீதியான பிளவுகளும்
அதிகமாகி கொண்டே வருகிறது.

எங்க போயி முடியுமோ?
இதனால் தொகுதிகளில் தங்கள் செல்வாக்கு, பலத்தை காட்ட வாரிசுகளை களமிறக்க
துடிக்கிறார்கள், அம்மா இறந்ததுக்கு அப்பறம் இது அதிகமாயிடுச்சு. எந்தவித
அடிப்படை பொறுப்பும் இல்லாதவர்களுக்கு கூட திடீரென எம்பி சீட் தருவது
நியாயமா? அடிமட்ட தொண்டர்கள் நிலைமை நாளை என்னாகும்? இதெல்லாம் எங்க போயி
முடிய போகுதோ?" என்று புலம்பி தீர்த்துவிட்டார்கள்.
No comments:
Post a Comment