
உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிப்பதற்காக சிறிய
கட்சிகளை கூட்டு சேர்க்கும் முயற்சியில் அகிலேஷ்-மாயாவதி தீவிரமாக ஈடுபட்டு
வருகின்றனர்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்
மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களும், சமாஜ்வாதி
கட்சி 37 இடங்களும், ராஸ்டிரீய லோக் தளம் 3 இடங்களும் போட்டியிடுவதாக
அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி
தொகுதியிலும், சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும்
வேட்பாளர்கள் நிறுத்தப் போவதில்லை என இக்கூட்டணி தெரிவித்திருந்தது.
மேலும், வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையில் மாயாவதி, அகிலேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, பாஜகவை தோற்கடிக்க மேலும் பல்வேறு சிறிய
கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடியின்
வாரணாசி தொகுதி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் ஆகிய தொகுதியில்
பிரபலமாக உள்ள சாதி பின்னணி கொண்ட இரண்டு கட்சிகளை தங்கள் கூட்டணியில்
சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து
அகிலேஷ் யாதவ் கூறுகையில், "நிஷாத் கட்சி, ஜன்வாடி கட்சி(சோசலிஸ்ட்)
மற்றும் ராஷ்டிரிய சமந்தா தாள் ஆகியவை எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு
மாநிலம் முழுவதும் பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளனர்" என்றார். இதில்,
நிஷாத் கட்சி மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கும் கட்சி.
சஞ்சய் சிங் தலைமையிலான ஜன்வாடி கட்சியில் (சோசலிஸ்ட்) ஓபிசி பிரிவில்
வரும் சவுகான் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். அதேபோல், ராஷ்டிரீய சமந்தா
கட்சியில் குஷ்வாஹா என்ற மற்றொரு ஓபிசி பிரிவினர் அதிக உள்ளனர்.
No comments:
Post a Comment