
இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் கட்டாயம் வேண்டுமா..? அதற்கு
பதிலாக ரஷ்யாவின் Mig ரக மல்டி ரோல் போர் விமானங்களை வாங்கினால் என்ன..? என
அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், அன்றைய விமானப் படை
தளபதி அரூப் ராஹாவிடம் கேட்கிறார். அதற்கு, "ரஃபேல் தான் இனி இந்திய
விமானப் படை. அதனால் தான் அதை கேட்கிறோம்" என பதிலளித்த போது மனோகர்
பாரிக்கர் வியந்துவிட்டாராம். ரஃபேலைப் பற்றி வெளி வராத அத்தனை ரகசியங்களை
எல்லாம் மனோகர் பாரிக்கருக்கு விளக்கினாராம்.
இதை வைத்துக் கொண்டு தான் பாகிஸ்தான் மற்றும் சீனாவை சமாளிக்கப் போகிறோம்,
இதை வைத்துத் தான் ஐஎன்எஸ் விக்ராந்தை வலுப்படுத்தப் போகிறோம், இதை
வைத்துத் தான் மொத்த இந்திய வான் எல்லையை வலை போட்டு காக்கப் போகிறோம் எனச்
சொன்னாராம். சமீபத்தில் கூட இன்றைய விமானப் படை தளபதியாக இருக்கும்
பைரேந்தர் சிங் தனாவ் பத்திரிகையாளர்களிடம் பேசி இருந்தார். அப்போது
"எங்களுக்கு ரஃபேல் வந்தால் இந்திய விமானப் படையின் பலம் பன் மடங்கு
அதிகரித்து விடும். ஒட்டு மொத்த இந்திய ராணுவ பலமே கூடியதாகவே நீங்கள்
கருதலாம்" என்றார்.


ரஃபேல் விவகாரத்தில் மோடி அம்பானிக்கு 50,000 கோடி கொடுத்துவிட்டார்,
30,000 கோடி திருடிக் கொடுத்துவிட்டார் என வரிசையாக புகார் எழுந்து கொண்டு
இருக்கும் போதும் ரஃபேல் விமானங்களை மாற்றாமல் வாங்கியே தீர வேண்டும் என
ஏன் அடம் பிடிக்கிறது இந்தியா..? ஒரு போர் விமானம் அதுவும் ரஃபேல் விமானம்
அத்தனை முக்கியமா..? ரஃபேலை ஈடு செய்ய வேறு எந்த போர் விமானத்தாலும்
முடியாதா..? ஏன்..?
ரஃபேல் ஒரு Medium Multi-Role Combat Aircraft எனபதால் இங்கிருந்தே
தொடங்குவோம். எல்லை தாண்டிச் சென்று வானில் இருந்து வேவு பார்ப்பது (Aerial
Reconnaissance), வானிலிருந்தே தரையில் இருக்கும் நம் நாட்டு இலக்குகளை
சரியாக தாக்கிவிட்டு நம் தரப்பு ராணுவத்தினரை பாதுகாப்பது (Close Air
Support), எதிரிகளின் ரேடார்களை செயலிழக்கச் செய்வது மற்றும் அவர்களின்
ரேடியோ தொடர்புகளை துண்டிப்பது (electronic-warfare), நம் நாட்டு ராணுவத்தை
பலப்படுத்த மற்ற நாட்டு ராணுவ சப்ளைகளை தகர்ப்பது அல்லது மற்ற நாட்டு
ராணுவ துருப்புகள் மீதே நேரடி தாக்குதல் நடத்துவது ( Deep air support),
எதிரி நாட்டு விமானப் படைகளை சமாளிக்க தயார் செய்திருக்கும் விஷயங்களை
வானில் இருந்தே ரேடார் மற்றும் ரேடியோ சிக்னல்கள் மூலமாகவோ அல்லது
ஆயுதங்கள் மூலமாகவோ தகர்ப்பது (Suppression of Enemy Air Defenses). இந்த
ஐந்து விஷயங்களையும் ஒரே ஒரு விமானம் மூலம் செய்ய முடியும் என்றால் அது
தான் மல்டி ரோல் காம்பட் ஜெட். ரஃபேலும் இந்த தலைப்பின் கீழ் பட்டியலிடப்பட
வேண்டிய விமானம்.
மல்டி ரோல் உருவான கதை..?
1939-ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் கால கட்டத்திலேயே மல்டி ரோல் போர்
விமானங்களை கொண்டு வந்துவிட்டது ஜெர்மனி. Junkers Ju 88 என்கிற ஜெர்மன்
போர் விமானம் தண்ணீரில் சென்று தாக்கக் கூடிய torpedo ஏவுகணைகளை ஏவுவது,
நீண்ட தூரம் பயணித்து கணமான ஏவுகணைகளை ஏவுவது, கடுமையான விமானப் போர்களில்
ஈடுபடுவது, வேவு பார்ப்பது, நேரடியாக ராணுவ துருப்புகளின் மீது தாக்குதல்
நடத்துவது என பல்வேறு பணிகளை ஒன்றாகச் செய்து மல்டி ரோல் போர் விமானம்
என்கிற பெயரை பெற்றுக் கொண்டது. ஆனால் முறைப்படி உலகம் 1968-ல் தான் ஒரு
சிறந்த மல்டிரோல் போர் விமானத்தைத் தயார் செய்ய திட்டமிட்டது. அப்படி
தயாரிக்கப்பட்ட விமானம் தான் Panavia Tornado. உலக நியதிப்படி, சொல்லித்
தயாரிக்கப்பட்ட முறையான மல்டிரோல் போர் விமானம் இது தான். இத்தாலி, மேற்கு
ஜெர்மனி, இங்கிலாந்து என மூன்று தேசம் இணைந்து தயாரித்தது.


இந்தியாவிடம்
இந்திய விமானப் படை மற்றும் இந்திய கடற்படை இரண்டுமே விமானங்களைப்
பயன்படுத்துகின்றன. இந்திய விமானப் படையிடம் MiG-29, HAL Tejas, Mirage
2000, Sukhoi Su-30, போன்ற மல்டிரோல் காம்பட் போர் விமானங்கள் இருக்கின்றன.
இருந்தாலும் ரஃபேலை வாங்குவதற்கான காரணங்களை இனி தான் பார்க்கப் போகிறோம்.
வாருங்கள் கொஞ்சம் ரஃபேலைப் பற்றியும் பார்த்துவிடுவோம்.
தஸால்ட் ரஃபேல்
தஸால்ட் ரஃபேல்
உலகின் தலை சிறந்த போர் விமானங்களில் ஒன்று. மேலே சொன்னது போல் போருக்கு
மட்டும் இன்றி உளவு பார்த்தல், தரைப்படைக்கு ஆகாயத்தில் இருந்து பாதுகாப்பு
அளிப்பது, தேவைப்பட்டால் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவது என
எல்லாவற்றும் தயாராக இருக்கும் மல்டி ரோல் போர் விமானம். 100% பிரான்ஸில்
தயாரான போர் விமானம். இதனால் பிரான்ஸ் நாடு சுமார் 50 பில்லியன் யூரோ வை
கல்லா கட்டி இருப்பதாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகைகளே சொல்கின்றன.


Captain Jean Guillame Martinez
இந்த போர் விமானத்தைப் பற்றி கேப்டன் ஜேன் குல்லியம் மார்டினஸ் (Captain
Jean Guillame Martinez) விளக்குகிறார். 18 வருடமாக பிரெஞ்சு ராணுவத்தின்
போர் விமானியாக இருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் தலை சிறந்த ரஃபேல்
ஸ்பெஷலிஸ்டுகளில் ஜேனும் ஒருவர். அதிகார பூர்வமாக ரஃபேல் விமானத்தைப்
பற்றிப் பேச பிரான்ஸ் ராணுவத்தால் நியமிக்கப்பட்டவர். உலகம் முழுவதும்
பல்வேறு போர் விமான கண்காட்சிகள் தொடங்கி ரஃபேல் விமானத்தைக் கேட்டு
விண்ணப்பிக்கும் நாடுகளின் விமானப் படைகளுக்கு க்ளாஸ் எடுப்பது வரை இவரின்
பணி பரந்துவிரிந்தது. ஒரே நாளில் பல்வேறு ரஃபேல் விமானங்களை ஏதோ வீட்டில்
இருந்து ஸ்கூட்டரை ஓட்டுவது போல ஓட்டிப் பார்க்க பிரான்ஸ் அரசு இவருக்கு
சிறப்பு அனுமதி கொடுத்திருக்கிறதாம்.
ரஃபேல் உடல்
15 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட இந்த குட்டி ராட்சச போர்
இயந்திரத்தை ஒரு டென்னிஸ் கோர்ட்டில் அடக்கி விடலாம். இன்ஃப்ராரெட், ரேடியோ
அலைவரிசை, ஒளி, ஒலி, ஸ்பெக்ட்ரம் என எதனாலும் இந்த போர் விமானத்தை எளிதில்
டிராக் செய்யப் படாத வகையில், பல்வேறு மெட்டீரியல்களால் பார்த்து பார்த்து
இழைத்திருக்கிறார்கள். எனவே ரஃபேல் வானில் பறப்பதை எதிரிப் படைகள் கண்டு
பிடிப்பது கடினம். அதனால் தான் இதை Stealth aircraft என்கிறார்கள்.
வேகம்
16 டன் த்ரஸ்டர் பலம் கொண்டது, வெறும் 400 மீட்டர் ஓடு தளத்தில் ரஃபேல்கள்
எழும்பிவிடும். ஒரு நிமிடத்துக்குள் ஒலியை விட வேகமாக பயணிக்கலாம்.
தரையிலிருந்து சுமார் 60 டிகிரி கோணத்தில் ரஃபேலை வான் நோக்கி செலுத்தலாம்.
ரஃபேல் விமானங்கள் ஓடு தளத்தில் இருந்து மேலே எழும்பத் தொடங்கிய 60-வது
நொடியில் நாம் மேகங்களைத் தாண்டி இருப்போம். பொதுவாக மேகங்கள் பூமியில்
இருந்து 15,000 - 18,000 அடிக்குள்ளேயே முடிந்துவிடும். அடுத்த 60
நொடிகளுக்குள் ரஃபேல் விமானங்களால் உங்களை 30,000 அடி உயரத்துக்கு
இழுத்துச் செல்ல முடியும். அதிகபட்சமாக ரஃபேல் விமானத்தால் 65,000 அடி வரை
பறக்க முடியும். மணிக்கு 2,130 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியுமாம்.
இது ஒலி (Sound)யை விட இரு மடங்கு வேகம்.
ரஃபேல் வரலாறு
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய
நாடுகள் இணைந்து ஒரு ஐரோப்பிய போர் விமானத்தைத் தயார் செய்ய 1980-களில்
ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளி வந்து பிரான்ஸ்
தனக்கு என்று ஒரு போர் விமானத்தை தயார் செய்து கொண்டது. அது தான் ரஃபேல்.
மார்சில் தஸால்டால் உருவாக்கப்பட்ட விமானம். மார்சில் ரஃபேல் விமானத்தை
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான கால நிலைகளுக்கு மட்டுமே வடிவமைக்காமல்,
உலகின் எந்த பகுதியிலும் செயல்படும் வகையில் ரஃபேலை வடிவமைத்தார்.
பதறிய அமெரிக்கா..?
1986-ல் ரஃபேல் A என்கிற விமானம் உலகின் பல்வேறு போர் விமான
கண்காட்சிகளிலும் விவரிக்கப்படுகிறது. ஜூலை 04, 1986-ல் ரஃபேல் A பல
நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதல் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக அமெரிக்காவின் பல ஜோடி கண்கள் இமைக்காமல் ரஃபேலின் சாகசங்களைக்
குறிக்கிறது. குறிப்பாக வேகம். மணிக்கு 1,300 கிலோமீட்டர் பயணித்து
அமெரிக்காவையே ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது ரஃபேல். அன்றைய தேதிக்கு ஒலியின்
வேகத்தில் பறக்கும் போர் விமானம் என்றால் அமெரிக்கா பதறுமா பதறாதா..?
அதுவும் ஒரு போர் விமானம் என்றால் சும்மா இருக்குமா என்ன..?
தத்தெடுத்த பிரான்ஸ் அரசு
1987-ம் ஆண்டில் "பிரான்ஸ் அரசு மார்சில் தஸால்டால் வடிவமைக்கப்பட்ட ரஃபேல்
ரக விமானங்களில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய
தீர்மானித்திருக்கிறது" என அறிவித்தது. அதன் பிறகு கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு
ரஃபேல் ரக விமானங்களும் முந்தைய வெர்சன்களை மிஞ்சும் வகையிலேயே இருந்தது.
பிரான்ஸ் தஸால்ட் நிறுவனத்தைத் உச்சி முகர்ந்தது. 2004-ல் பிரான்ஸ் கடற்படை
ரஃபேலை தன் கப்பற்படையின் ஒரு அங்கமாக சேர்த்துக் கொண்டது. 2006-ல் தான்
பிரான்ஸ் விமானப் படையில் ரஃபேல் வலது கால் எடுத்து வைக்கிறது.
மல்டிரோலாக ரஃபேல்..!
ஒரு போர் விமானமாக தாக்குதல்களை மேற்கொள்ள சரியாக இருக்கிறது. இதை மல்டி
ரோலாக செய்தால் என்ன..? உற்சாகமாக வேலையில் இறங்கியது ரஃபேல் குழு. 1968
தொடங்கி சுமார் 20 வருடங்களுக்குப் பின் தான் பிரான்ஸ் இதைப் பற்றி பேசியது
என்றாலும் இதற்கு முன் இருந்த விமானங்களை எல்லாம் விட சிறந்த மல்டி ரோல்
போர் விமானமாக தயார் செய்ய முனைந்தது தஸால்ட். கிட்டதட்ட எட்டு ஸ்பெஷலிஸ்ட்
விமானங்கள் செய்யும் வேலையை ஒரே ஒரு போர் விமானம் செய்தால்...? செய்தது
ரஃபேல். பிரான்ஸ் ராணுவத்துக்குத் தேவையான அனைத்தையும் ரஃபேலைக் கொண்டே
செய்ய முடிந்தது. அதனால் பல்வேறு போர் விமானங்களை தங்கள் பயன்பாட்டில்
இருந்து தொடர்ந்து நீக்கிக் கொண்டிருக்கிறது பிரான்ஸ். வரும் 2030-ம் ஆண்டு
வாக்கில் இந்த ரஃபேல் ரக விமானங்களைத் தவிர மற்ற பல விமானங்களுக்கு
பிரான்ஸ் ராணுவம் ஓய்வளிக்கப் போவதாகவும் Nationa Geography, Diuscovery
போன்ற பிரபல சேனல்களிலேயே பேசி வருகிறார்கள்.
உலக சாதனை
ஒரு ரஃபேல் விமானத்தின் மொத்த காலி எடை 11 டன். ஆனால் ரஃபேல் விமானத்தால்
16 டன் எடையை சுமந்து செல்ல முடியும். தன் எடையை விட சுமார் 1.5 மடங்கு
கூடுதல் எடையாக ஆயுதங்கள், கருவிகள் மற்றும் எரிபொருளைக் கொண்டு பறக்கும்
ரஃபேல் ஒரு சாதனை தானே..? என்கிறார் ஜேன். இத்தனைக்கும் உலகில் வேறு எந்த
ஒரு போர் விமானமும் தன்னை விட 1.5 மடங்கு எடையைக் கொண்டு பறந்ததில்லையாம்.
ரஃபேல் ரகங்கள்
தற்போது பிரான்ஸ் அரசு ரஃபேல் B, ரஃபேல் C, ரஃபேல் M என மூன்று ரகங்களைப்
பயன்படுத்துகிறது. இதில் ரஃபேல் M ரக போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டின்
கப்பற்படைகளில் விமானம் தாங்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த
ரக விமானங்கள் ஓடுதளத்தில் இருந்து 400 மீட்டருக்குள் மேலே எழும்புவது போல
அதே 400 மீட்டர் ஓடு தளத்துக்குள்ளேயே தரை இறங்கவும் வேண்டும். உலகிலேயே
போர் விமானங்களில் மிகக் குறைந்த லேண்டிங் ஸ்பீடு கொண்ட விமானமும் ரஃபேல்
தான். வானத்தில் பறக்கும் போது 2,130 கிமீ வேகத்தில் பறக்கும் போர் விமானம்
தரை இறங்கும் போது வெறும் 200 கிமீ வேகத்தில் தரையத் தொடுகிறதாம். இதுவரை
உலகின் எந்த போர் விமானமும் இத்தனை குறைந்த வேகத்தோடு தரை இறங்கியது
இல்லையாம். இதனால் லேண்டிங் சமயங்களில் நடக்கும் விபத்துக்கள் பெருமளவு
குறைந்திருக்கிறதாம். இதை எல்லாம் விட ரஃபேலின் எட்டு விஷயங்களை
முக்கியமாகச் சொல்கிறார்கள். அது கிட்ட தட்ட உலக சாதனை தானாம்.
1. Multi directional radar
ரஃபேலின் கூரான மூக்குப்பகுதியில் 100 கிலோமீட்டருக்குள் இருக்கும் 40
எதிரி விமானங்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு ஏகப்பட்ட சின்ன சின்ன
டிரான்சிட் ரிசீவர்களை வைத்திருக்கிறார்களாம். எத்தனை டிரான்சிட்
ரிசீவர்களை வைத்திருக்கிறார்கள் என்கிற எண்ணிக்கை கூட நெபோலிய ரகசியமாம்.


2. Passive radar
அதே போல் ஒரு போர் விமானம் ரேடாரைப் பயன்படுத்தினால் எதிரி நாட்டு
விமானங்களுக்குத் தெரிந்து விடும். அப்படி தெரியாமல் இருக்க Passive radar
என ஒரு கருவியையும் பொருத்தி இருக்கிறார்களாம். ஆக ரஃபேல் விமானிக்கு
எதிரிகளைத் தெரியும். ஆனால் எதிரிகளுக்கு ரஃபேல் இருப்பது தெரிய வராது
என்கிறார்கள்.
3. Camera
ஒரு டன் எடைக்கு ஒரு ராட்சத கேமராவையும் ரஃபேல் விமானங்களுக்கு அடியில்
பொருத்தி இருக்கிறார்களாம். இந்த கேமராவால் ரஃபேல் விமானம் 65,000 அடி
உயரத்தில் இருந்தால் கூட ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ 10 சென்டி மீட்டர்
அளவுக்கு அருகில் சென்று போட்டோ எடுத்தது போல தெளிவான புகைப்படங்கள்
எடுக்க முடியுமாம். அதாவது ஒரு வரின் ஐடி கார்ட்டை 65,000 அடி உயரத்தில்
ரஃபேலில் இருந்து போட்டோ எடுத்து படித்துவிடலாம்
4. Spectra
ரஃபேல் ரக விமானங்களில் பல முனைகளில் இந்த ஸ்பெக்ட்ரா
பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்பெக்ட்ரா என்கிற கருவி தான் ரஃபேல்
விமானங்களை எதிரி விமானங்கள் கண்டு பிடிக்காத வகையில் ரேடார், ரேடியோ,
இன்ஃப்ராரெட் போன்ற சிக்னல்களை ஜாம் செய்யுமாம். அதோடு ஒரு ஏவுகனை ரஃபேலைத்
தாக்கும் தொலைவுக்கு வந்தால் கூட உடனடியாக சில மின் காந்த அலைகளை
வெளியிட்டு ஏவுகணைகளை திசை திருப்புமாம்.
5. Weapoary System
SCALP:300 கிலோகீட்டர் தொலைவில் இருக்கும் எதிரி இலக்குகளை ஒரு மில்லி
மீட்டர் மாறாமல் தாக்கக் கூடிய ஏவுகணை
METEOR:எதிரி நாட்டு விமானங்களை 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது
கண்டு பிடித்து அழிக்கக் கூடிய ஏவுகணை.
Mika: ரக ஏவுகணைகள் 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எதிரி விமானங்களை
தானே கண்டு பிடித்து அழிக்கக் கூடிய ஏவுகணை.
GPS bombs:சரியான latitude மற்றும் longitude-களைச் சொன்னால் போய் தாக்க
கூடிய ஏவுகணை,
Laser guided Bombs: லேசர் மூலமாக வழிகாட்டப்பட்டு இலக்குகளை தகர்க்கும்
ஏவுகணை.
Storm shadow: நீண்ட தூரம் சென்று இலக்குகளை தாக்கப் பயன்படுத்தப் படும்
ஏவுகணை.
Exocet: 70 கிலோமீட்டர் தொலைவில் வரும் போர்க் கப்பல்களைக் கூட தகர்க்கும்
வல்லமை கொண்ட ஏவுகணை
Giat 30: துப்பாக்கிகள், சுமார் 1,055 மீட்டர் வரை உள்ள இலக்குகளை
தாக்கும்.
இப்படி மேலே சொன்ன 8 வகையான ஆயுதங்களோடு ஒரே நேரத்தில் போருக்கு போகக்
கூடிய ஒரே போர் விமானம்... ரஃபேல் தான். குறிப்பாக பேரழிவைத் தரக்கூடிய அணு
ஆயுதங்களைத் தாங்கிச் சென்று இலக்குகளை அழிக்கும் வல்லமையும் ரஃபேலுக்கு
உண்டு.
6. War zones
ஒரு போர் விமானத்துக்கான அழகே அது எத்தனை போர்களம் கண்டிருக்கிறது. அதில்
எப்படி செயல்பட்டிருக்கிறது என்பதை வைத்துத் தான் சொல்வார்களாம். ரஃபேல்
விமானம் லிபியா, மாலி, சிரியா, ஈராக் என சிக்கலான பல போர்க் களங்களை
கண்டிருக்கிறது. நம் கேப்டன் ஜேனும் அவரது ரஃபேலும் சேர்த்து 10 மணி நேரம்
30 நிமிடங்கள் தொடர்ந்து பறந்திருக்கிறார்கள். ஆறு முறை ஜேனின் ரஃபேலுக்கு
எரிபொருள் ஆகாயத்திலேயே நிரப்பப்பட்டதாம். 10 நிமிடத்தில் 5 டன் எரிபொருள்
மாற்றி சாதனை படைத்திருக்கிறார்கள். ஒரு முறை ரஃபேலின் எரிவாயு நிரப்பப்
பட்டால், சுமார் 60 முதல் 90 நிமிடங்கள் வரை பறக்குமாம். அதோடு எரிவாயு
கலன்களில் கூட சுமார் 5 டன் எரிபொருளை சுமந்து செல்ல முடியும்.
7. Ease of Maintenance
ஒரு மணி நேரத்திலேயே ரஃபேலின் முக்கிய இன்ஜின்களை முழுமையாக நீக்கி புதிய
இன் ஜின்களை பொறுத்திவிடலாம். இத்தனை வேகமாக ஒரு போர் விமானத்தின்
இன்ஜின்களை மாற்றுவது உலகிலேயே முதல் முறையாம். அதோடு ஒரு ரஃபேல்
விமானத்தின் வாழ்கைக் காலம் சுமார் 75 வருடங்கள் வரை வரும் என அடித்துச்
சொல்கிறதாம் தஸால்ட் நிறுவனம். அது வரை பிரான்ஸ் நாட்டு தஸால்ட் நிறுவனமும்
அதற்கான சேவைகளை செய்யும் எனவும் சொல்கிறார்களாம். இதுவரை எந்த ஒரு போர்
விமானத்தின் வாழ்கை காலமும் 75 ஆண்டுகளுக்கு இருந்ததில்லையாம்.
8. Competitors
8. Competitors
Eurofighter Typhoon ரஃபேலை விட வேகத்தில் சிறந்ததாக இருந்தாலும்,
கப்பற்படைக்கு தோதாக இல்லை. அதே போல் இளைஞர்களுக்கு பிடித்தமான Lockheed
martin F35 போர் விமானம் ரஃபேலை விட இரண்டு மடங்கு விலை அதிகம் அதோடு
ரஃபேலுக்கு நிகரான போர் அனுபவங்களைப் பெற வில்லை
என சர்வதேச போர் விமான வல்லுநர்களே சொல்கிறார்கள். ரஷ்யாவின் Mig ரக
விமானங்கள் ரஃபேலுக்கு கொஞ்சம் நெருக்கமாக வருகிறது என்றாலும், ரஃபேலை
முந்த வில்லை என உறுதியாகச் சொல்கிறார்கள் போர் விமானிகள்.
Quality, performance, handling, weaponary systems, Nuclear weapons,
radar jammer, Ease of Maintenance, fuel refilling, Multi directional
radar, spectra, passive radar போன்ற வசதிகளால் தான் இந்தியா ரஃபேலுக்கு
டிக் அடித்துக் காத்திருக்கிறது.
கூடுதல் செய்தி
கூடுதல் செய்தி
ஒரு ரஃபேல் போர் விமானத்தைத் தயாரிக்க சுமார் 600 பேர் இரண்டு
வருடங்களுக்கு மேல் உழைக்க வேண்டி இருக்கிறதாம். ஒரு வருடத்தில் தஸால்ட்
நிறுவனத்தால் 11 ரஃபேல் விமானங்களை மட்டுமே தயாரிக்க முடிகிறதாம். Katya
என்கிற மென்பொருளை ரஃபேல் தயாரிப்பதற்காகவே தயாரித்தது தஸால்ட் நிறுவனம்.
இந்த மென் பொருளைக் கொண்டு 1 மில்லி மீட்டர் தொலைவில் வைத்து ஒரு பொருளை
எப்படிப் பார்க்க முடியுமோ அப்படி பார்த்து வடிவமைக்க முடியும். இன்று
கார்கள், விமான தயாரிப்பு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பிலும் இந்த
மென்பொருளை விற்று காசு பார்க்கிறது தஸால்ட் சிஸ்டம்ஸ் என்கிற நிறுவனம்.
இது தஸால்ட் ஏவியேஷனின் துணை நிறுவனம். உலகின் பல்வேறு நாடுகளில்
தயாரிக்கப்படும் பாகங்களை ஒரு இடத்தில் வைத்து இணைக்கும் போது எல்லாமே
கச்சிதமாக பொருந்துகிறது என்றால் அதற்கு காட்யா மென்பொருள் ஒரு முக்கிய
காரணமாம்
No comments:
Post a Comment