
டெல்லி: இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தின்
பிடியில் இருந்து நாளை விடுதலை செய்யப்படுவதாக, அறிவிக்கப்பட்டிருந்த
நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட
குழு கூட்டம் டெல்லியில் இன்று இரவு கூடி ஆலோசனை நடத்தியது.
பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடியின்போது இந்திய விமானி அபிநந்தன், அந்த
நாட்டு ராணுவத்திடம் சிக்கிக் கொண்டது இந்தியாவிற்கு ஒரு பின்னடைவாக
மாறியது. ஆனால் அவரை வெற்றிகரமாக மீட்டு தாயகம் கொண்டு வருவதற்கு இந்தியா
எடுத்த ராஜதந்திர நடவடிக்கைகள் பலன் அளித்தன.
இதையடுத்து இன்று மாலை சுமார் 4.30 மணிக்கு பாகிஸ்தான் பிரதமர்
இம்ரான் கான் வெளியிட்ட அறிவிப்பில், அபிநந்தன் நாளை இந்தியாவிடம்
ஒப்படைக்கப்படுவார் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.
இதையடுத்து இரவு 7 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்
பாதுகாப்புக்கான உயர்மட்ட கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்
சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா
சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின்
தளபதிகள் பங்கேற்றனர்.
அபிநந்தன் விடுதலை செய்யப்படும் நிலையில், அடுத்ததாக பாகிஸ்தானுக்கு
எதிராகவும், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களுக்கு எதிராகவும்
எவ்வாறு செயல்பட வேண்டும்? பாகிஸ்தான் எல்லையில் நடத்திவரும்
அச்சுறுத்தல்களை எவ்வாறு சமாளிக்க வேண்டும்? என்பது தொடர்பாக இந்த
கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
No comments:
Post a Comment