
இந்திய விமானப்படை இன்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத
முகாம்களை தாக்கி அழித்தது.
தாக்குதல் பற்றி வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே, அதிகாரப்பூர்வமாக பின்னர்
செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
இந்திய விமானப்படை விமானங்கள், இன்று அதிகாலை 3.30 மணிக்கு, பாகிஸ்தான்
நாட்டுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தின.
இதையடுத்து எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த தாக்குதல்
எங்கெங்கு நடத்தப்பட்டது, எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது
குறித்து, காலை 11.30 மணிவரை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
பலத்த எதிர்பார்ப்புக்கு நடுவே, செய்தியாளர்களிடம் காலை 11.30
மணியளவில் டெல்லியில், தாக்குதல் பற்றி விவரித்தார் விஜய் கோகலே. தாக்குதல்
தொடர்பாக இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதுதான்.
விஜய் கோகலே கூறியதாவது: புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத
இயக்கத்திற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நாடாளுமன்றம் மீதான
தாக்குதல், பதன்கோட் தாக்குதல்களிலும், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத
அமைப்புக்கு தொடர்பு உண்டு. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத குழுக்கள் இயங்குகின்றன. ஆனால், பல முறை
சொல்லியும், பாகிஸ்தான் இதுவரை ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது
நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில்தான், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இந்தியா மீது
மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை மூலம்
இந்தியாவிற்கு தகவல் கிடைத்தது. இதற்காக தீவிரவாதிகளுக்கு பயிற்சி
அளிக்கப்படுவதாக தெரியவந்தது. இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டியது
அவசியப்பட்டது. எனவே இன்று அதிகாலை இந்தியா தாக்குதலை தொடுத்தது.
பாலக்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய தீவிரவாத முகாம்
உள்ளது. இதனால் அங்கு, இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த
தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர்கள்,
பயிற்சியாளர்கள், தற்கொலை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ்-இ-முகமது
தீவிரவாதிகள் பலரும் அழிக்கப்பட்டனர்.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசார் மைத்துனர்
மவுலானா யூசுப் அசார் என்ற, உஸ்தாத் கௌரி என்பவர் தலைமையில், பாலக்கோட்
பகுதியில், தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில்
மவுலானா கொல்லப்பட்டார்.
இது எந்த நாட்டுக்கும் எதிரான தாக்குதல் கிடையாது. ஜெய்ஷ்-இ-முகமது
தீவிரவாத அமைப்பின் மீதான தாக்குதல் இது. பாகிஸ்தானை சேர்ந்த எந்த ஒரு
பொதுமக்களும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, மலை முகடு மற்றும் காடுகளில்
உள்ள தீவிரவாத முகாம்கள் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டது.
தீவிரவாதிகளுக்கு தனது நாட்டு மண்ணில் இடம் இலல்லை என்று பாகிஸ்தான்
கூறியிருந்தது. எனவே இனியாவது, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
கேள்விகளுக்கு பதிலளிக்க கோகலே மறுத்துவிட்டார்.
No comments:
Post a Comment