
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் அதிமுக கூட்டணியில் மட்டுமல்லாமல்
அக்கட்சியிலும் கூட பூசல் வெடித்துள்ளதாக தெரிகிறது. ராமநாதபுரம் தொகுதி
அதிமுக எம்.பி. அன்வர் ராஜா தனது பதவிகளை ராஜினாமா செய்து விட்டதாக
செய்திகள் பரவின. ஆனால் அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமாதானப்படுத்தி
விட்டதாக கூறப்படுகிறது.
பாஜக மீது கடும் அதிருப்தியுடன் இருந்து வருபவர் மூத்த தலைவரான அன்வர்
ராஜா. சமீபத்தில் லோக்சபாவில் முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் கூட அவர்
மிகக் கடுமையாக மோடி அரசைத் தாக்கிப் பேசினார். இது பெரும் சலசலப்பை
ஏற்படுத்தியது.
அன்வர் ராஜா பேசுகையில், முத்தலாக் சட்ட மசோதா என்பது முஸ்லிம்களுக்கு
எதிரானது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பாஜக மூன்று மாநிலங்களில்
ஆட்சியைப் பறிகொடுத்தது. கெடுவான் கேடு நினைப்பான் என்பது உங்களுக்குத்
தான் சரியாக இருக்கும். நீங்கள் இறைவனுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு
வந்துள்ளீர்கள். இறைவனின் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது என்று
அதிரடியாக பேசினார்.
அன்வர் ராஜாவின் இந்த அதிரடியால் பாஜக அதிர்ந்து போனது. இந்த நிலையில்
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த
பின்னணியில் அவர் தனது கட்சிப் பதவிகள், எம்.பி பதவி உள்ளிட்டவற்றை
ராஜினாமா செய்து விட்டதாகவும், தனது விலகல் கடிதங்களை முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமியை நேரில் சந்தித்து கொடுத்து விட்டதாகவும் மாலையில் தகவல்கள்
பரவின.
இதுகுறித்து அன்வர் ராஜா தரப்பில் விசாரித்தபோது, உண்மையில் விலகல்
கடிதங்களுடன்தான் முதல்வரைப் பார்க்கப் போனார் அன்வர் ராஜா. பாஜகவுடன்
கூட்டணி அமைத்தது, ராமநாதபுரத்தை அவர்களுக்கு ஒதுக்குவது போன்றவை குறித்து
அவர் அதிருப்தி தெரிவித்தார். இருப்பினும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார் என்று கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment