
மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா
மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே
லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இருவரையும்
அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய
விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை
நியமித்தது. சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி
நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்
சாட்டியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை
கடுமையாக சாடியுள்ளார். ‘சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, ரபேல் ஒப்பந்த
ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்து வந்தார். ஆனால் அவர் கட்டாய விடுப்பில்
அனுப்பப்பட்டு உள்ளார். இதில் பிரதமர் மோடியின் செய்தி மிகவும் தெளிவானது.
அதாவது ரபேல் பிரச்சினைக்கு அருகில் யார் வந்தாலும் நீக்கப்படுவார்,
துடைத்து எறியப்படுவார். நாடும் அரசியல் சட்டமும் மிகுந்த ஆபத்தில் உள்ளன’
என காங்கிரஸ் கூறியுள்ளது. பிற எதிர்க்கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்து
வருகிறது.
ரபேல் போர் விமானம் வாங்குவதில்
ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டதில் முறைகேடு நடந்தது தொடர்பாக விசாரிக்க
முற்பட்டதாலே அலோக் வர்மாவை அரசு நீக்கியுள்ளது என காங்கிரஸ் குற்றம்
சாட்டுகிறது. சிபிஐ இயக்குநர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு
எதிராக காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டம் அறிவித்தது.
அதன்படி
இன்று சிபிஐ தலைமை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில்
பேரணிநடைபெற்றது. இதில் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும்,
தொண்டர்களும் திரளாகப் பங்கேற்றனர். டெல்லியில் தயால் சிங் கல்லூரியில்
இருந்து புறப்பட்ட பேரணி சிபிஐ தலைமையகத்தில் முடிவடைந்தது. பின்னர் சிபிஐ
தலைமையகத்தின் முன்பாக, ராகுல்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஐ அமைப்பை மத்திய அரசு வளைக்கப் பார்ப்பதாகக் கூறி கண்டன முழக்கங்கள்
எழுப்பப்பட்டன.சி.பி.ஐ. தலைமையகங்களுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள
தடுப்புக்களை உடைக்க காங்கிரஸ் தொண்டர்கள் முயன்றனர்.
இதை தொடர்ந்து மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிட்டதாக ராகுல் காந்தி மற்றும் பல சக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுபோல்
லக்னோ, பெங்களூரு மற்றும் பாட்னா உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகங்களுக்கு
அருகே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சண்டிகரில் காங்கிரஸ்
தொழிலாளர்களுக்கு எதிராக தண்ணீர் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன.
No comments:
Post a Comment