ஸ்டெர்லைட்
ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்படுகிறது. நீதிபதி ஜவாத் ரஹீம் தலைமையிலான அமர்வு இதனை
விசாரிக்கிறது. அமர்வில் 2 சுற்றுச்சூழல் நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சுற்றுச்சூழல் விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு வருவதாகவும்
ஆலையில் இருந்து வெளியேறும் புகை அல்லது கழிவுகளால் எந்தவிதமான பாதிப்பும்
ஏற்படவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆலையின் ஒட்டுமொத்த உற்பத்தி பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வந்ததாகவும் ஆலை
மூடப்பட்டதால் ஊழியர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதாகவும்
மனுவில் கூறப்பட்டுள்ளது . மேலும் ஆலையின் பராமரிப்பை அரசு மேற்கொண்டு
வருவதால் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் உடனடியாக ஆலையை ஸ்டெர்லைட்
நிர்வாகத்திடம் தர வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னணி
தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்கள் பல்வேறு
கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்
சூழல் பாதிக்கப்படுவதாகவும், ஆலை தொடர்ந்து செயல்பட்டால் தூத்துக்குடியில்
மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடைபெற்ற
போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்
ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் போராட்டக்காரர்கள்
மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் ஸ்டெர்லைட் ஆலையை
நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு
வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு
அளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்படுவதாக தமிழக
அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment