ஐந்து மாவட்ட மக்களை இணைத்துப் போராடி எட்டு வழிச்சாலைத் திட்டத்தைத்
தடுத்து நிறுத்துவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்
ஆர். முத்தரசன் தெரிவித்துள்ளார்.
எட்டு வழிச்சாலைத் திட்டத்தை
கைவிட வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சி
மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில்
பங்கேற்றவர்கள் பசுமை சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி முழக்கங்களை
எழுப்பினர்.
ஆர்பாட்டத்தின் போது, ஏற்கனவே சேலம்-சென்னை இடையே
ஒன்றுக்கும் மேற்பட்ட தடத்தில் சாலைகள் உள்ள நிலையில், விவசாய நிலங்களை
எடுத்து புதிதாக எட்டு வழி சாலை அமைக்க என்ன அவசியம் உள்ளது என்று கேள்வி
எழுப்பினார் முத்தரசன்.
மேலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கனிம வளத்தை கொண்டு செல்ல வசதியாக
இந்த சாலை அமைய உள்ளதாகக் கூறிய அவர் இத்திட்டத்தினை உடனடியாக நிறுத்த
வலியுறுத்தினார்.
பசுமை வழிச் சாலை என்று கூறி ஒட்டு மொத்த பசுமை
பூமியையும் அழிப்பதை ஏற்க முடியாது என்றும், இந்த திட்டத்தை தடுத்து
நிறுத்த அரசியல் கட்சிகள், ஐந்து மாவட்ட விவசாயிகள் மற்றும் பாதிக்கப்படும்
மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக அவர்
தெரிவித்தார்.
90 சதவீத விவசாயிகள் எட்டு வழிச் சாலைக்கு ஆதரவு
வழங்கியுள்ளதாக சட்டமன்றத்திலேயே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி
வருவதை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று கூறிய முத்தரசன், இது போன்ற உண்மைக்கு
மாறான ஒரு கருத்தை சட்டமன்றத்தில் எந்த முதல்வரும் இதுவரை தெரிவித்ததில்லை
என்று கூறினார்.
No comments:
Post a Comment