தில்லியில் யூனியன் பிரதேசத்தில், மத்திய அரசுக்கா? மாநில அரசுக்கா?
யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற கேள்வியோடு தொடரப்பட்ட வழக்கில், தில்லி
அரசுக்கு ஆதரவாகவும், துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்றும்,
அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடக்கூடாது என்றும் இந்திய
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முதல்வர் நாராயணசாமிக்கும்
ஆளுநர் கிரண் பேடிக்கும், அதிகாரப் போட்டி நடந்து வரும் புதுவை யூனியன்
பிரதேச அரசியலில் இத்தீர்ப்பு எத்தகைய எதிர்வினையை ஏற்படுத்தும் என்று
அரசியல் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
தில்லி
யூனியன் பிரதேசத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையினான ஆம் ஆத்மியின் ஆட்சி
ஏற்பட்டதில் இருந்து, தில்லி அரசுக்கும், மத்திய அரசுக்குமான மோதல் போக்கு
தொடங்கியது.
தில்லி அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு துணை நிலை ஆளுநராக இருந்த
நஜீப் ஜங், முட்டுக்கட்டை போட்டுவந்ததாக அப்போது குற்றஞ்சாட்டிய ஆம் ஆத்மி
கட்சி அவருக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில்,
தில்லி யூனியன் பிரதேசம் என்பதால் தில்லி நிர்வாகத்தில் துணை நிலை
ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மேல்முறையீடு செய்தது.
இந்த
வழக்க்கை விசாரித்துவந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,
நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஏ.எம் கன்வில்கர், டி.ஓய் சந்திரசூட், அசோக் பூஷன்
ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இன்று புதன்கிழமை முக்கியத்
தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்பில்,''தில்லி அமைச்சரவை எடுக்கும்
முடிவுகளையும், பரிந்துரைகளையும் ஏற்று துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்க
வேண்டும். துணை நிலை ஆளுநருக்குத் தனி அதிகாரம் ஏதும் கிடையாது. அமைச்சரவை
எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடக்கூடாது. தனிப்பட்ட
கருத்து வேறுபாடுகளால், அரசின் முடிவுகளில் காலதாமதம் ஏற்படக்கூடாது'' என
கூறப்பட்டுள்ளது.
மேலும்,''
சட்டம் - ஒழுங்கு, நிலம், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகிய மூன்று விஷயங்களில்
மட்டுமே மத்திய அரசு தலையிட்டுப் பரிந்துரைகளை செய்யலாம். அன்றாட நிர்வாக
முடிவுகளுக்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியதில்லை. ஆளுநர்
தன்னிச்சையாக செயல்படக்கூடாது. இதற்கு அரசமைப்புச் சட்டம் அனுமதி
வழங்கவில்லை'' எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளைத் தடுக்க கூடாது. தில்லி அரசின்
முடிவுகளில் திருப்தி இல்லை என்றால் கேள்வி எழுப்பலாம், ஆனால்
முட்டுக்கட்டை போடக் கூடாது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
- டெல்லியில் அதிகாரம் யாருக்கு? கேஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு
- புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் எடுக்க குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு
கூட்டாட்சி
தத்துவத்தின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட
வேண்டும் என்றும், மக்கள் நலத் திட்டங்கள் துணைநிலை ஆளுநரால் தாமதமானாலும்,
அரசால் தாமதமானாலும் இருவருமே பொறுப்பு என நீதிபதிகள் கருத்து
தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி, தமிழகத்தில் எதிர்வினை
ஆளுநர்கள்
மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக பரவலான புகார் எழுகிற புதுவை
யூனியன் பிரதேசத்திலும், தமிழகத்திலும் இந்த தீர்ப்பு எதிர்வினைகளை
உருவாக்கியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் நாராயணசாமி
இத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார். நாராயணசாமிக்கும் பிரதேச துணை ஆளுநர்
கிரண் பேடிக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நடந்துவருகிறது. தங்கள் அரசு
தீட்டும் திட்டங்களை ஆளுநர் தடுப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டிவந்தார்.
தீர்ப்புக்குப்
பிறகு புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, "இந்தத்
தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்திற்கு முழுமையாகப் பொருந்தும். நான் முதல்வராக
இருந்த 2 ஆண்டு காலமும் துணை நிலை ஆளுனர் அமைச்சரவையின் அறிவுரைப்படிதான்
செயல்பட வேண்டும், தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என தொடர்ந்து
வலியுறுத்திவந்துள்ளேன். அவருக்கு 19 முறை கடிதங்களை எழுதியுள்ளேன். அவர்
அதிகாரிகளை அழைத்து தனியாக கூட்டம் போட அதிகாரமில்லையெனக் கூறியுள்ளேன்.
அவர் கேட்கவில்லை" என்றார் நாராயணசாமி.
தமிழ்நாட்டில் ஆளுனராக
பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற பிறகு, மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வுகளை
மேற்கொள்வதை தி.மு.க. கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், இந்தத்
தீர்ப்புக்கு அக்கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
பாஜக ஆதரவு
நிலையில் இருந்துவரும் ஆளும் அதிமுக, ஆளுநரின் இந்தச் செயலை எதிர்க்கவில்ல.
ஆனால், எதிர்க்கட்சியான திமுக மாநில அரசின் உரிமை பறிபோவது தொடர்பாக
தொடர்ந்து குரல்கொடுத்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு தமிழக ஆளுநர்
பன்வாரிலால் புரோஹித் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்ய சென்றபோது,
அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டியதாக நூற்றுக்கணக்கான
திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தீர்ப்பு தொடர்பாக திமுக செயல்
தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மாநில அந்தஸ்தே இல்லாத
தில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர்
நடக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இதனை முழு அதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள், குறிப்பாக தமிழக
ஆளுநர் நன்கு புரிந்து செயல்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment